×

சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பேராவூரணி : சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில், பராமரிப்பின்றி சுற்றித்திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்டத்தில் தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி தொடக்கம் வரை சுமார் 40 கிலோ மீட்டர் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

கன்னியாகுமரி முதல் சென்னை வரை செல்லும் முக்கிய சாலையான இந்த கிழக்கு கடற்கரை சாலையில், தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி வரை முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் என முக்கியமான ஊர்களும் அமைந்துள்ளது.மேலும், ராமேஸ்வரம், ராமநாதபுரம், நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் கார்களிலும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு உரம், மீன், கருவாடு உள்ளிட்ட வியாபார பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.

இந்த கிழக்கு கடற்கரை சாலையில், தினசரி நூற்றுக்கணக்கான கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. இதனால், இந்த பகுதியில் தினசரி 20க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடக்கின்றன. எனவே, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் கவுன்சிலர் மரக்காவலசை சாகுல்ஹமீது கூறியது, கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. பலர் கை, கால் உடைந்தும், உயிர் பலி ஏற்பட்டும் உள்ளது. இரவு நேரங்களில் சொல்லமுடியாத அளவுக்கு மாடுகளால் தொல்லை உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது போல சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை, பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். கால்நடையின் உரிமையாளர்களின் அலட்சியப் போக்கினால் உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும். எனவே, மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் அவசர விபத்து சிகிச்சை மையம் திறக்க வேண்டும் என்றார்.

Tags : Sethupavasathiram ,East Coast Road , Peravurani: On the Sethupavasathiram East Coast Road, accidents often occur due to cattle roaming without maintenance.
× RELATED சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்