×

அண்டை நாடுகளுடன் தாலிபான் அரசு முதன்முறையாக ஆலோசனை!: ஆப்கானில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து விவாதம்..!!

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி ஏற்பட்டு 75 நாட்கள் கடந்துள்ள நிலையில், முதன்முறையாக அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துக் கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி காபூலை கைப்பற்றிய தாலிபான்கள், ஆப்கானில் ஆட்சி அமைத்துள்ளனர். இந்தமுறை தாலிபான்களிடம் சாதகமான மாற்றங்கள் தென்பட்டாலும், பெண்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் முடிவில் மட்டும் அவர்களிடம் மாற்றம் ஏற்படவில்லை என பெண்ணுரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தாலிபான்கள் ஆட்சி குறித்து சாதகம், பாதகம் குறித்த கருத்துக்கள் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஆப்கான் தலைநகர் காபூலில் அண்டை நாடுகளின்  வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், துர்க் மேனிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேரடியாகவும், சிலர் காணொலி வாயிலாகவும் கலந்துக் கொண்டனர். இதுகுறித்து தாலிபான் மூத்த தலைவர் அகமதுல்லா வாஷிக் தெரிவித்ததாவது, இதுபோன்ற சந்திப்புகளை தாலிபான் அமைப்பு வரவேற்கிறது. அதற்கு ஆதரவும் தருகிறது. ஏன் என்றால் ஆப்கானில் நிலவும் தற்போதைய சூழலில் அண்டை நாடுகளுடன் உறவுகளை புதுப்பித்துக் கொள்வதும், நட்பை தொடர்வதும் அவசியம்.

அதுமட்டுமல்ல, ஆப்கானின் தற்போதைய அமைதியான சூழலை அண்டை நாடுகள் தெரிந்துகொள்ள இது வழி வகுக்கும் என்று குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானை மறுகட்டமைப்பது, சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அண்டை நாடுகள் இடையேயான வர்த்தகத்தை தீவிரப்படுத்தவும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Taliban government ,Afghanistan , Neighboring country, Taliban government, consultation
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி