சுவாதி கொலையாளி ராம்குமார் சந்தேக மரணம் பிரேத பரிசோதனை செய்த டாக்டர் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்

சென்னை: நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சந்தேக மரணம் தொடர்பாக, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் மனித உரிமை ஆணையத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016 ஜூன் 24ம் தேதி வேலைக்கு சென்ற போது ரயில் நிலைய பிளாட்பாரத்தில் காத்திருந்த இன்ஜினியர் சுவாதியை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்துவிட்டு அரிவாளோடு தப்பிச் சென்றார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவத்தின் மகன் ராம்குமார் தான் சுவாதியை கொலை செய்தார் என்று கூறி  கைது செய்தனர். அப்போது ராம்குமார், கழுத்தை அறுத்துக் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து, கடந்த 2016 செப்டம்பர் 18ம் தேதி சிறையில் மின்சார வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சுவாதி கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே சுவாதி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி ராம்குமார் இல்லை என்றும், அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அவருக்கு ஆஜரான வழக்கறிஞர் ராம்ராஜ் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்.

இந்நிலையில், ராம்குமாரின் மரணம் தொடர்பான விசாரணை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நடந்து வந்தது. அப்போது ராம்குமாரின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதோடு ராம்குமாரின் மூளை, இதயம், நுரையீரல், நாக்கு, கல்லீரல், மண்ணீரல், மேல் உதடு, கீழ் உதடு, சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் திசுக்களை ஹிஸ்டோபேத்தாலஜி நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என ஹிஸ்டோபேத்தாலஜி நிபுணர்கள் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் ராம்குமார் மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் இருந்த நிலையில் அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டரிடம் விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் முடிவு செய்திருந்தது. அதன்படி அவரை ஆணையத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று ஆணையத்தில் டாக்டர் செல்வகுமார் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அவரிடம் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார் இதனை தொடர்ந்து  விசாரணை தள்ளி வைக்கப் பட்டது.

Related Stories: