×

செண்பகராமன்புதூர் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகும் நெல்-கொட்டகை அமைக்க விவசாயிகள் வேண்டுகோள்

ஆரல்வாய்மொழி : தோவாளை  தாலுகாவில் திட்டுவிளை, தாழக்குடி, செண்பகராமன்புதூர் ஆகிய பகுதிகளில்  நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 2 முறை அறுவடை நடக்கிறது.  இப்படி அறுவடை செய்யும் நெல்லை  கண்ணன்புதூர், சோழபுரம், ஆரல்வாய்மொழி, தோவாளை,  குமரன்புதூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் செண்பகராமன்புதூர் நெல்  கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

பெரும்பாலும் அறுவடை காலங்களில் மழை பெய்வதால் விவசாயிகள் பெரும்  இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த ஆண்டும் அறுவடைக்கு தயாராக இருந்த  நிலையில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் உள்ள  நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமல் போய்விட்டது.

இதனால்  நெல் மணிகள் முளை விடுகின்ற சூழ்நிலை உருவாகியது. இது ஒரு புறம் இருக்க  அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் செண்பகராமன்புதூர் நெல்கொள்முதல்  நிலையத்திற்கு கொண்டு வரும்போது நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு  குறைவாக இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றனர். இதனால்  விவசாயிகள் ஈரப்பதம் குறையும் வரைக்கும் கொள்முதல் நிலையத்திலேயே  நெல்மணிகளை கொட்டி பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது.

தற்போது மழை  காரணமாக விவசாயிகள் விளைவித்து கொண்டு வந்த நெல்லை கொள்முதல் நிலையத்திலேயே  கொட்டி வைக்கின்றனர். இதனால் ஈரப்பதம் அதிகரித்து நெல் மணிகள்  முளைவிடுகிறது. இதனால் விவசாயிகள் பெருமளவு நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.  செண்பகராமன்புதூர் கொள்முதல் நிலையத்தில் அதிக அளவு நிலப்பரப்பு  இருக்கிறது. ஆனால் விவசாயிகள் கொண்டு வருகிற நெல் மழையில் நனையாமல் பாதுகாக்க  கொட்டகை இல்லை.

இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் நெல்லை  திறந்த வெளியிலேயே வைக்கின்றனர். அறுவடை செய்த நெல் மணிகளை விவசாயிகள்  பாதுகாப்பாக வைக்கும் விதத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் உடனே கொட்டகை  அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலங்களில் நெல் கொள்முதல்  நிலையங்களில் இரவு நேரங்களிலும் விவசாயிகள் கொண்டு வருகின்ற நெல்மணிகளை  கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை   விடுத்துள்ளனர்.

Tags : Shenbagaramanputhur , Aralvaymozhi: There are paddy procurement centers in Thittuvilai, Thalakudi and Shenbagaramanputhur areas in Tovalai taluka.
× RELATED செண்பகராமன்புதூரில் கோயில் சிலை உடைப்பு