×

லவ்வுனா லவ்வு... அப்படிப்பட்ட லவ்வு... சாமானியரை மணந்தார் ஜப்பான் இளவரசி: அரச குடும்ப அந்தஸ்தை தூக்கி வீசினார்

டோக்கியோ: ஜப்பான் இளவரசி மாகோ 3 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடன் படித்த சாதாரண இளைஞரை காதல் திருமணம் செய்தார். ஜப்பான் அரச குடும்பத்தில் ஆண்கள் மட்டுமே வழி வழியாக பட்டத்துக்கு வரும் பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது. பழமைவாதிகள் இன்னும் பெண் வாரிசுகளுக்கு பட்டம் சூட்டுவதை நிராகரிக்கின்றனர். பேரரசர் நருஹிட்டோவுக்கு பிறகு, அகிஷினோ, அவரது மகன் ஹிசாஹிட்டோ மட்டும் அரச குடும்ப வாரிசுகளாக உள்ளனர். அரச குடும்ப பெண்கள் காதல் திருமணம் செய்தால் அவர்கள் அரச குடும்ப அந்தஸ்தை இழப்பார்கள். அரச குடும்ப சட்டப்படி, பெண்களுக்கு ஒரு குடும்ப பெயர் தான் இருக்க வேண்டும்.  

இந்நிலையில் ஜப்பான் இளவரசி மாகோ, தன்னுடன் டோக்கியோ சர்வதேச கிறிஸ்தவ பல்கலை.யில் படித்த வகுப்பு தோழன் கேய் காமுரோவை காதலித்து வந்தார். இவர்கள் 2017ம் ஆண்டு தங்களின் திருமணத்தை அறிவித்தனர். அப்போது ஏற்பட்ட சில நிதி விவகார பிரச்னையால் திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில், காமுரோ 2018ம் ஆண்டு சட்டம் படிக்க அமெரிக்கா சென்று விட்டார். கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்து ஜப்பான் திரும்பினார். இந்நிலையில், காமுரோ-இளவரசி மாகோ திருமணம் நேற்று நடந்தது. இதன்மூலம், அரச குடும்ப அந்தஸ்தை மாகோ  இழந்தார்.

எந்தவித ஆடம்பர விழாக்களும், திருமண சடங்குகள், அழைப்பிதழ்கள், அறிவிப்புகள் இல்லாமலும் எளிமையாக திருமணம் நடந்தது. இது குறித்து இளவரசி மாகோ கூறுகையில், ‘‘காமுரோ எனக்கு விலை மதிப்பற்றவர். எங்கள் மனம் விரும்பியபடி மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இந்த திருமணம் அவசியமாகிறது,’’ என்றார். காமுரோ கூறுகையில், ‘‘மாகோவை நான் நேசிக்கிறேன். நான் ஒருமுறை தான் வாழப்போகிறேன். அதனால், என்னை நேசிப்பவருடன் சேர்ந்து வாழ்வதை விரும்புகிறேன்’. மாகோவுடன் எனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் மகிழ்ச்சி நேரத்திலும், கஷ்ட நேரத்திலும் உறுதுணையாக இருப்போம்,’’ என்றார்.

*  பணம் வாங்க மறுப்பு
அரச குடும்ப உரிமை துறந்து வெளியேறுவதற்காக மாகோவுக்கு அவருடைய பெற்றோர் ரூ.100 கோடி வரதட்சணையாக வழங்கினர். ஆனால், அதை ஏற்க மாகோ மறுத்து விட்டார். ஒரு சாமானியரை மணந்த அரச குடும்ப பெண்கள், வரதட்சணை வேண்டாம் என்று அரண்மனையை விட்டு வெளியேறுவது 2ம் உலகப் போருக்குப் பிறகு இதுவே முதன்முறை.

* கண்ணீருடன் பைபை
அரச குடும்ப அந்தஸ்தை இழந்து அரண்மனையை விட்டு இளவரசி மாகோ வெளிர் நீல நிற உடை அணிந்து பூங்கொத்து கையில் பிடித்தபடி வெளியேறினார். தனது தந்தை இளவரசர் அகிஷினோ, தாய் பட்டத்து இளவரசி கிகோ ஆகியோர் முன் தலைவணங்கி விடைபெற்றார். பின்னர், சகோதரி காகோவை கட்டிப்பிடித்து அழுதார்.

Tags : Lavuna lavvu ,lavvu ,Japan , Lavuna lavvu ... such a lavvu ... married a commoner Princess of Japan: throws away royal family status
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!