×

இறக்குமதி காருக்கு நுழைவு வரி தள்ளுபடி கோரிய வழக்கு தனி நீதிபதி கருத்தை நீக்குமாறு நடிகர் விஜய் மேல்முறையீடு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை:  நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில் நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்ததோடு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.

அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்க கோரியும் நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, முகமது ஷபீக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, நிலுவை வரித்தொகையான ரூ.32 லட்சத்து 30 ஆயிரத்தை ஆகஸ்ட் 7ம் தேதி செலுத்திவிட்டோம். அந்த தொகை  அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதால் தனி நீதிபதியின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டது.

நடிகர்கள் நுழைவு வரி செலுத்துவதில்லை என்றும் வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. ரசிகர்கள், உண்மையான கதாநாயகர் என்று நினைக்கும் நிலையில் ரீல் கதாநாயகராக இருக்க கூடாது, வரி செலுத்த மறுப்பது சட்டவிரோதம் போன்ற நீதிபதியின் கருத்துகள் தேவையற்றது. கடின உழைப்பால் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது. சினிமா துறை லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. மனுதாரருக்கு வரி ஏய்ப்பு செய்யும் எண்ணம் ஏதுமில்லை. விஜயை தேச விரோதியாக கூறுவது தவறு.  

வரி கேட்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று வாதிட்டார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கருத்துகளை நீக்கக்கோரி சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் ஏன் கோரிக்கை வைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய் தரப்பு வக்கீல், இந்த வழக்கு மட்டும் அல்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் இதேபோன்று  பொதுப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துகள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளதுடன்,  குற்றவாளி போல காட்டியுள்ளது வேதனையளிக்கிறது. ஒரு லட்சம் அபராதம் செலுத்துவதில் எந்த பிரச்னையுமில்லை. ஆனால் எதிர்மறை கருத்தை நீக்க வேண்டும் என்றார். இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Tags : Vijay , Actor Vijay appeals to dismiss judge's opinion on import tax exemption on imported car: Court adjourns verdict
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...