நடிகை கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை:  நடிகை கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக 351  பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர், சென்னை  போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது  பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார்  விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து, மணிகண்டன் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு  313 (பெண்ணிடம் அத்துமீறி செயல்படுதல்), 417 (நம்பிக்கை மோசடி), 376 (ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுதல்), 506(1) (கொலை மிரட்டல்), 67 ஏ தகவல் தொழில்நுட்ப சட்டம் (ஆபாசத்தை உள்ளடக்கிய புகைப்படங்களை வெளியிடுதல்), (பகிர்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, தலைமறைவான மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள்  அமைக்கப்பட்டது. மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களூருவில் தங்கி இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அதன்பின் மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 7ம் தேதி நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த புகாரில் ஏற்கனவே மணிகண்டன் மீது 2 வழக்குகள் இருந்த நிலையில், 342, 352 ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: