ராஜபாளையம் அருகே பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சோழபுரத்தில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்திலிருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் சோழபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டும் பணியின் போது மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருநாவுக்கரசு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவி பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி மற்றும் வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் கல்வெட்டை ஆய்வு செய்தனர்.

வரலாற்றுத்துறை பேராசிரியர் கந்தசாமி கூறுகையில், ‘‘மூன்றரை அடி நீளம், முக்கால் அடி அகலமுடைய பட்டைக்கல் ஒன்றில் தமிழில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ளது. முதல் வரி சிதைந்து காணப்படுவதால் படிக்க இயலவில்லை. சுந்தரபாண்டிய சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் வைணவத்தின் ஒரு பிரிவினரான வைகானசர் மூலம் பெருமாள் கோயிலுக்கு பணத்தை தானமாக வழங்கப்பட்ட செய்தியை குறிக்கக்கூடிய கல்வெட்டாக பிற வரிகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. தேவியாற்றின் கரையோரம் அமைந்துள்ள இவ்வூரில் ஏராளமான நுண் கற்கருவிகளும், ரோமானிய நாணயங்களும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால தமிழ் கல்வெட்டு ஆகும். இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டால் முழுமையான வரலாற்றை வெளிக்கொணர முடியும்’’ என்றார்.

Related Stories: