×

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை: அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி  ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னையில் கடந்த 12ம் தேதி டிபிஐ வளாகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகள்குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் அனுப்பி வைத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது  குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  உண்மைத் தன்மை சான்று வழங்க கேட்டு வரும் தபால்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆசிரியர்கள் உண்மைத் தன்மை சான்று வழங்க கேட்டு வரும் தபால்களை உடனடியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.

*  மார்ச் 2021-2022ம்கல்விஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன. அவை பள்ளிகள் மூலம் நேரடியாக மாணவர்களுக்கு சென்று சேர்ந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
*  மலைப் பிரதேசங்களில் உள்ள தனித் தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக சேவை மையங்கள் இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சேவை மையங்களில் அரசு பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சேலம், ஏற்காடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, கூடலூர், குன்னூர், வால்பாறை போன்ற இடங்களில் அரசுப் பள்ளிகளில் சேவை மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.
*  மெட்ரிக் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் கல்விக் கட்டணம் சார்பான பட்டியல் வைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
*  மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படக் கூடாது. அவ்வாறு அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கக் கூடாது. கட்டிட உறுதிச் சான்றுக்கான அரசாணையை பின்பற்றி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.
*  பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்கள் படிக்கின்ற பள்ளிகள் அனைத்தும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
*  மாணவியர் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு புகார் அளிக்க ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும்.
*  சுயநிதி பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் தற்காலிக அங்கீகாரம் வாங்கா பள்ளிகளுக்கு உடனடியாக வழங்கவும்  அதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பார்வையிட்டு அது தொடர்பான விவரங்களை தொடக்க கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.

Tags : Commissioner of School Education, Order
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...