×

நிழலாக தொடரும் கொரோனா பொங்கல் வரை உஷார் மக்களே: சுகாதாரத்துறை எச்சரிக்கை

நெல்லை: கொரோனா வைரஸ் நிழல்போல் பின்தொடர்வதால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகை வரை முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. எனினும் முழுமையாக விடைபெறவில்லை. 3ம் அலை பரவலை தடுப்பதற்காக வாரந்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தற்போது பண்டிகை காலமாக இருப்பதால் பொது இடங்களில் மக்கள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தொற்று பரவும் இடங்களில் குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் மற்ற உறுப்பினர்களுக்கும் பரவுகிறது.

அதேபோல் நெருக்கடி மிகுந்த இடங்களில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அடுத்தடுத்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதேவேளை கொரோனா வீரியம் சற்று குறைவாக உள்ளதாகவே கூறப்படுகிறது. குறிப்பாக உயிரிழப்புகள் குறைந்துள்ளன. எனினும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றுவது என்பது அரிதாகிவிட்டது. இதனால் சுகாதாரத்துறை வட்டாரத்தினர் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் ஆகியோர் கூறியதாவது: கொரோனா வைரஸ் முழுமையாக நம்மைவிட்டு அகலவில்லை. பரவல் வேகம் குறைந்துள்ளது.

இதற்கு தடுப்பூசியும் முக்கிய காரணம். ஆனால் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவருடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களுக்கும் பரவுவது என்பது தொடர்கிறது. இதனால் மக்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம். அடுத்த 11 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் அதற்கான ஷாப்பிங் செய்ய பொதுமக்கள் பொது இடங்களில் அதிகளவில் கூடுவது அதிகரித்துள்ளது. அந்த பகுதிகளில் சமூக இடைவெளியை காண முடியவில்லை. முகக் கவசம் அணிந்து வருபவர்களும் மிகக்குறைவாகவே உள்ளனர். பலர் முகக் கவசத்தை சரியாக அணிவதில்லை. இதுபோன்ற பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு எச்சரிக்கை செய்யப்படுகிறது.

நெல்லை மாவட்டத்ைத பொருத்தவரை தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 பேருக்கு பரவுகிறது. அரசு மருத்துவமனையில் 35 பேர் வரை சிகிச்சையில் உள்ளனர். `கொரானா’ அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெறுவது நல்லது. இதனால் மற்றவர்களுக்கு வைரஸ் பரவாது. தீபாவளி பண்டிகை மட்டுமின்றி அடுத்து வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வரை மக்கள், பொது இடங்களில் கூடும்போது கவனமாக இருக்க வேண்டும். முதல் அல்லது 2 தவணை தடுப்பூசி போட்டு கொண்டோம், எனவே நமக்கு எந்த பாதிப்பும் வராது என்ற அலட்சியம் வேண்டாம்.

தினமும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. இதனையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பலர், 2ம் டோஸ் தடுப்பூசி போடாமல் உள்ளனர். எனவே அவர்களும் 2ம் டோஸ் தடுப்பூசியை உரிய நாளில் போட்டுக் கொள்ள வேண்டும், என்றனர்.

Tags : Ushar ,Corona Pongal , Ushar people till Corona Pongal which will continue to be a shadow: Health Department warning
× RELATED உள்ளூர் மக்கள் மீது தாக்குதல்கள்;...