சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு தர்மஅடி

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நகை பறித்தவர்களை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். சாத்தான்குளம் பங்களாதெருவை சேர்ந்தவர் கிருபைராஜ் மனைவி புஷ்பலதா (41). இவர் காமராஜ் நகரில் உள்ள மசாலா கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு செல்வதற்காக காமராஜ் நகர் விலக்கில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த இருவர், அவரை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்கநகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். புஷ்பலதா கூச்சலிடவே அதே பகுதியில் நின்ற வாலிபர்கள் 10க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மற்றொரு பைக்கில் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை துரத்தினர்.

சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தில் வைத்து நகைபறிப்பில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து  தர்ம அடி கொடுத்து சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் விஜயநாராயணம் ஆணியன்குளத்தை சேர்ந்த சங்கரன் மகன் முத்துக்குமார் (38), வல்லநாடு சந்திரன் மகன் ராஜேஷ் (30) என  தெரியவந்தது. இவர்கள் பல்வேறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குபதிந்து இருவரையும் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More
>