×

பணியின் போது கிடைத்த தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்: தலைமை செயலாளர் இறையன்பு பாராட்டு.!

சென்னை: குப்பை சேகரிக்கும் போது கிடைத்த தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த சென்னை தூய்மை பணியாளர் மேரிக்கு தலைமை செயலாளர் வெ இறையன்பு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர், அண்ணாமலை நகரை சேர்ந்த கூரியர் ஊழியர் கணேஷ்ராமன் (36). இவர் கடந்த மார்ச் மாதம் 100 கிராம் தங்க நாணயத்தை வாங்கி ஒரு கவரில் போட்டு வீட்டின் கட்டிலுக்கு கீழ் வைத்திருந்தார். அவர் மனைவி வீட்டை சுத்தம் செய்தபோது அந்த கவரை குப்பையில் போட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணேஷ்ராமன், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதுகுறித்து தூய்மை பணி மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர் செந்தமிழ் செல்வனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தூய்மை பணியாளர்களுக்குத் தகவல் தெரிவித்தார். இதற்கிடையே குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மேரி என்பவர், தங்க நாணயம் இருந்த கவரை கண்டார். இதுகுறித்து தனது மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு சாத்தாங்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.

சாத்தாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ்வரி தங்க நாணயத்தை சரி பார்த்த பின்னர், துாய்மை பணியாளர் மேரி கையால் கணேஷ் ராமன் தம்பதியிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, 100 கிராம் தங்க நாணயத்தை நேர்மையாக ஒப்படைத்த மேரிக்கு போலீசார், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு, மேரியை பாராட்டி தன் கைப்பட கடிதம் எழுதி அவருக்கு வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில் இறையன்பு கூறியிருப்பதாவது: தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது. குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. நீங்கள் தூய்மைப் பணியாளர் மட்டுமல்ல, தூய்மையானப் பணியாளர். உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். குறுக்கு வழிகளெல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று. இவ்வாறு தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

Tags : Chief Secretary , Cleaning staff who handed over the gold received during the mission to the right person: Chief Secretary, Praise be to God!
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...