×

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது 9 ஆண்டுகளில் 3,721 தாக்குதல்: 5 ஆண்டுகளாக படிப்படியாக அதிகரிப்பு

தாகா: வங்கதேசத்தில் கடந்த 9 ஆண்டுகளில் இந்துக்கள் மீது 3,721 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. வங்கதேசத்தில் கொமிலா பகுதிகளில் சில நாட்களுக்கு முன் இந்துக்கள் நடத்திய துர்கா பூஜையில் மதக்கலவரம் ஏற்பட்டது. துர்க்கையின் காலுக்கு அடியில் குரான் வைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், 500க்கும் மேற்பட்டோர் திரண்டு தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறை நாடு முழுவதும் பரவி, இந்துக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களாக வசிக்கும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடப்பது புதிதில்லை. அவர்கள் தொடர்ந்து குறிவைத்து தாக்கப்படுவதாக வங்கதேசத்தின் ‘ஏஎஸ்கே’ எனும் மனித உரிமைகளுக்கான தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

* ஊடகங்களில் வெளியான வன்முறை சம்பவங்கள் அடிப்படையில் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, கடந்த 9 ஆண்டில் இந்துக்கள், அவர்களின் சொத்துகள், வழிபாட்டு தலங்கள் மீது 3,721 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

* கடந்த 5 ஆண்டுகளில் இந்து கோயில்கள், வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல், சிலை உடைப்பு என 1,678 சம்பவங்கள் நடந்துள்ளன.

* கடந்த 3 ஆண்டில் 18 இந்து குடும்பங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.

* 2014ல் மிக மோசமாக, இந்து விரோத கும்பல்களால் சிறுபான்மையினரின் 1201 வீடுகள் உடைக்கப்பட்டுள்ளன.

* சமீபத்திய துர்கா பூஜை வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டு, 70 பேர் காயமடைந்து உள்ளனர். 130 வீடுகள், கடைகள், கோயில்கள் நொறுக்கப்பட்டுள்ளன.

நாட்டை விட்டு வெளியேறுவார்கள்
தனது நாட்டில் கொலை மிரட்டலுக்கு உள்ளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்‌ரீன் நேற்று கூறுகையில், ‘‘வங்கதேசம் இப்போது ‘ஜிஹாதிஸ்தான்’ஆகிவிட்டது. வங்கதேசத்தில் எல்லா அரசாங்கமும் மதத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளன. இந்து சிறுபான்மையினருக்கு அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை. நாடு பிரிவினையின்போது 30 சதவீதமாக இருந்த இந்துக்கள் தற்போது 9% ஆக சரிந்து விட்டனர். இதே நிலை தொடர்ந்தால் இந்துக்கள் பாதுகாப்பின்றி அங்கிருந்து வெளியேறி வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்,’’ என்றார்.

Tags : Hindus ,Bangladesh , 3,721 attacks on Hindus in Bangladesh in 9 years: a gradual increase over 5 years
× RELATED கைம்பெண் செங்கோல் வாங்கக் கூடாது என்பதா?: ஐகோர்ட் கிளை கண்டனம்