×

சாதி அவதூறு புகாரில் நடிகை கைது: 5 மாதங்களுக்கு பின் அரியானா போலீஸ் நடவடிக்கை.!

சண்டிகர்: சாதி அவதூறு புகாரில் நடிகை யுவிகா சவுத்ரி கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பின் அரியானா போலீசாரால் கைது செய்யப்பட்டார். அரியானா மாநிலம் ஹன்சி காவல் நிலையத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன் சமூக ஆர்வலர் ரஜத் கல்சன் என்பவர் அளித்த புகாரில், ‘நடிகை யுவிகா சவுத்ரி சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிக்கும் வகையில்  கேவலமான மற்றும் ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்தார். இவரது பேச்சு சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, யுவிகா சவுத்ரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இவ்விவகாரம் பூதாகரமாக மாறியதால், யுவிகா சவுத்ரி தனது டுவிட்டர் பதிவில், ‘நான் பேசிய வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனால், அந்த வார்த்தைகள் திரித்து விடப்பட்டுள்ளன.

யாருடைய மனதையும் நான் காயப்படுத்தவில்லை. நான் பயன்படுத்திய வார்த்தைகள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன். உங்கள் அனைவர் மீதும் எனக்கு நிறைய அன்பு உள்ளது’ என்று தெரிவித்தார். இருந்தும், போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அரியானா உயர்நீதிமன்றத்தில் யுவிகா சவுத்ரி சார்பில் போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் இம்மனு விசாரணைக்கு வந்தபோது, யுவிகா சவுத்ரியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், ஹன்சி போலீசார் நேற்று அரியானாவில் வசிக்கும் யுவிகா சவுத்ரியை திடீரென கைது செய்னர். சில மணி நேரம் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு, பின்னர் அவரை விடுவித்தனர். நேற்று முன்தினம் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகையும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது அரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Aryana , Actress arrested on caste defamation complaint: Haryana police action after 5 months!
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து