புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமலேயே நடத்தை விதி அமல்!: தீபாவளி விற்பனைக்கான பொருட்களை வாங்க முடியாமல் வியாபாரிகள் அவதி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க பணம் கொண்டு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலுக்காக கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. தொடர்ந்து, தேர்தல் அட்டவணையில் தவறு இருப்பதால் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு, மறுதேர்தல் நடத்த 4 மாதம் அவகாசம் கோரப்பட்டுள்ளது. தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், நடத்தை விதிகள் மட்டும் அமலில் இருந்து கொண்டிருக்கிறது.

இதனால் புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகளை விளக்கி கொள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர். அதில், புதுச்சேரியில் வார்டு வரையறையை சரி செய்து, இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த சில மாதங்களாகும். அதுவரை அரசு திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும். எனவே அரசு, தனது கடமையை உணர்ந்து நீதிமன்றம் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை திரும்பப் பெறவும், சட்டசபையில் அறிவித்த அனைத்து திட்டங்களை நிறைவேற்றவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இருந்தபோதிலும், தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பொருட்களை வாங்க முடியாமல் வியாபாரிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். நடத்தை விதியால் அதிகளவில் பணம் கொண்டுசெல்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. எனவே உள்ளாட்சி தேர்தலுக்கான விதிமுறைகளை உடனடியாக தளர்த்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே உள்ளாட்சி தேர்தல் வழக்கு நகரும் திசையைப் பொறுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை நீக்க அனுமதி பெற வாய்ப்பிருக்கிறது என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அமையும். முதல்வரும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.

Related Stories: