ஆரணியில் சாலையோரம் குப்பை கொட்டியதால் நகராட்சி வாகனம் சிறைபிடித்து மக்கள் சாலை மறியல்: டிஎஸ்பி சமரசம்

ஆரணி: ஆரணியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குப்பைகளை சாலையோரம் கொட்டிய வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி சமரசம் செய்து வைத்தார். ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. மேலும். இந்த வார்டுகளில் நகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைத்து தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக துப்புரவு பணியாளர்கள் சரிவர குப்பைகள் அகற்றுவதில்லை. இதனால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான கொசப்பாளையம், அருணகிரிசத்திரம், பெரியக்கடை வீதி, பையூர் செல்லும் சாலை, சைதாப்பேட்டை, விஏகே நகர், வடுகசாத்து  செல்லும் சாலை, மில்லர்ஸ் சாலை, வேலப்பாடி செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் எரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சாலை ஓரங்களில்  குப்பைகளை கொட்டாமல் இருக்கவும், குப்பைகளை  எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமாதங்களாக புகார் அளித்தும் இதுவறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், நேற்று நகராட்சி வண்டியில் கொண்டுவந்த குப்பைகளை மில்லர் சாலை அருகில் உள்ள சாலை நடுவில் குப்பைகள் கொட்ட முயன்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், நகராட்சி நிர்வாகத்ததை கண்டித்து  திடீர் சாலைமறியில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த டவுன் போலீஸ் எஸ்ஐக்கள் கிருஷ்ணமூர்த்தி, ரகு மற்றும் போலீசார் சாலைமறியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்க மறுத்த அவர்கள், ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை சில விஷமிகள் தீ வைத்து விட்டு செல்கின்றனர். மழைக்காலங்களில்  கண்ணகிநகர், முகாம் பகுதிகளில் உள்ள கால்வாய்களில் குப்பை கழிவுகளால் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியால் நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக வேலப்பாடி, மில்லர்சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் வரை மறியலை கைவிடமாட்டோம் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, டிஎஸ்பி கோட்டீஸ்வரன் மற்றும் போலீசார் அவர்களிம் பேச்சு வார்த்தை நடத்தி நகராட்சி ஆணையாளரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories:

More