×

தமிழகத்தைச் சேர்ந்த இருவரின் புற்றுநோய் சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கப்பட்டது: டி.ஆர்.பாலுவுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம்

சென்னை : தமிழகத்தைச் சேர்ந்த இருவரின் புற்றுநோய் சிகிச்சைக்காக, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்பட்டது என, டி.ஆர்.பாலு, எம்.பிக்கு, பிரதமர் அலுவலகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக, டி.ஆர்.பாலு எம்.பி. அலுவலகம் இன்று (அக். 19) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திமுக பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் மாவட்டம் சேலையூரைச் சேர்ந்த மரியசாந்தி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரைச் சேர்ந்த பிஜூ விக்டர் ஆகியோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உதவிடுமாறு, கடந்த ஆகஸ்ட் மாதம், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

டி.ஆர்.பாலுவின் பரிந்துரையையும் வேண்டுகோளினையும் ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, மரியசாந்தி, பிஜூ விக்டர் ஆகியோருக்கு மருத்துவ சிகிச்சைக்கு தலா ரூ.3,00,000 நிதியுதவி வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக, பிரதமர் அலுவலகம், 29 செப்டம்பர் 2021, அன்று டி.ஆர்.பாலு எம்.பி.க்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து மரியசாந்தி, பிஜூ விக்டர் ஆகியோரின் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைகளுக்காக தலா ரூபாய் 3,00,000 முறையே, சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் வழங்கப்படும் என்றும், சிகிச்சை முடிந்த பின்னர், உரிய ஆவணங்களின் நகலை, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், ஆவணங்கள் கிடைத்த பின்னர், உதவித்தொகையானது, உடனடியாக மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், பிரதமர் அலுவலகக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Prime Minister's Office ,DR ,Palu , புற்றுநோய், சிகிச்சை, நிதியுதவி ,டி.ஆர்.பாலு,பிரதமர் அலுவலகம் ,கடிதம்
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...