×

அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்கட்டும் : ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மிலாது நபி வாழ்த்து

டெல்லி : அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது மிலாது நபி வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான இன்று இஸ்லாமியப் பெருமக்களால் மிலாது நபியாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மிலாது நபியை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

இறைத் தூதர் முகமது நபி பிறந்த புனித தினம்  மிலாது நபியாக கொண்டாடப்படுகிறது.  நாட்டு மக்களுக்கு குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர  சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகமது நபியின் வாழ்க்கை சகோதரத்துவம், இரக்கம் மற்றும் அன்புக்கு உதாரணமாக உள்ளது. மனித குலத்திற்கு அவர் எப்போதும் ஊக்கமளிப்பவராக உள்ளார். அவரது வாழ்க்கை மற்றும் லட்சியங்களிலிருந்து தாம் உத்வேகம் பெற்று சமூகத்தின் செழிப்பு மற்றும் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு பணியாற்றுவோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மிலாது நபியை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

“முகமது நபியின் பிறந்த தினத்தை கொண்டாடும் மிலாது நபி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

இரக்கம், சகிப்புத்தன்மை, சர்வதேச சகோதரத்துவம் ஆகிய சரியான பாதைகளை மனித குலத்துக்கு காட்டியவர் முகமது நபி அவர்கள்.

நியாயம், மனிதநேயம் கொண்ட இணக்கமான சமூகத்தை உருவாக்க அவரின் நிலைத்த போதனைகள் நமக்கு தொடர்ந்து வழிகாட்டட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மிலாது நபியை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிலாது நபி வாழ்த்துகள். அமைதியும், வளமும் நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கட்டும். அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்கட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

Tags : President ,Modi ,Milad Nabi , ஜனாதிபதி, பிரதமர் மோடி
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...