×

சண்டிகரில் பல இடங்களில் பட்டாசு வெடித்து ராம்லீலா கொண்டாட்டம்: விதிமுறை மீறி வெடித்ததாக கூறி 9 வழக்கு

சண்டிகர்: சண்டிகரில்  பட்டாசு வெடித்து ராம்லீலா கொண்டாடிய குழுக்கள் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடமாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரிக்கு அடுத்த நாளான விஜயதசமி அன்று ராம்லீலா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ராமனின் வரலாற்று நிகழ்வுகளை நாடகமாகவும், நாட்டிய நாடகமாகவும் மக்கள் முன்னிலையில் கலைஞர்கள் நடித்து காண்பிப்பர். இறுதியில் தீய சக்திகளாகக் கருதப்படும் அரக்கர்களான ராவணன், இந்திரஜித், கும்பகர்ணன் ஆகியோர்களின் உருவப் பொம்மைகளை ராமர் அம்பெய்து எரிக்கும் நிகழ்வும் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்படும். அப்போது, உருவ பொம்மைக்குள் பட்டாசுகளை வைத்து வெடிக்கும் சம்பவங்களும் நடக்கும். ஆனால், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) உத்தரவின்படி பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சண்டிகரில் பல்வேறு இடங்களில் ராம்லீலா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது பட்டாசுகளால் அடைக்கப்பட்ட உருவ பொம்மைகளை வெடித்து மக்கள் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதையடுத்து, சண்டிகர் போலீசார் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து ராம்லீலா கொண்டாடியதாக 9 எம்ஐஆரை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, பாஜக தலைவர் அருண் சூட் கூறுகையில், ‘டச்ஹ்ராவில் நடத்தப்பட்ட ராம்லீலா நிகழ்ச்சியில் பட்டாசு பயன்படுத்துவது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. தீபாவளி தினத்தன்று மட்டுமே பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், மற்ற தினத்தில் பட்டாசு வெடிக்கலாம். சண்டிகர் போலீசார் அவசர அவசரமாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இந்த எப்.ஐ.ஆர்களை திரும்பப் பெறக் கோருவோம்’ என்றார்.

Tags : Ramlila ,Chandigarh , Fireworks explode at Ramlila celebrations in Chandigarh: 9 cases
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்