தமிழகத்தில் 2020ல் நடந்த 45,489 சாலை விபத்துக்களில் 8,060 பேர் இறப்பு: விபத்தை மேலும் கட்டுப்படுத்துவதில் அரசு தீவிரம்

சென்னை: தமிழகம் முழுவதும், கடந்த ஆண்டு 45,489 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. இதில் 8060 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும், பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை பயன்படுத்த வைத்துள்ளனர். அதன்படி, 27 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் சாலைகளில் ஓடுகின்றன. இதில் தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன. புதிதாக வாகனம் வாங்குவோரால், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசல், வீடு, ஷாப்பிங் போது பார்க்கிங் பிரச்னை என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.

இதுபோதாது என்று, சில வாகன ஓட்டிகள், சிகப்பு விளக்கு எரியும் போதே வாகனத்தை இயக்குதல், மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுதல், செல்போனில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குதல், ஹெல்மெட் அணியாதது, சீட்பெல்ட் அணியாதது என்று ஏகப்பட்ட விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் சம்மந்தப்பட்ட வாகனத்தை இயக்குபவர்கள் மட்டும் அல்லாது அவர்களை சார்ந்த குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே சாலைவிபத்துக்கள் நடக்காமல் தடுப்பதில் தமிழக அரசு தீவீர கவனம் செலுத்தி வருகிறது.

இதனால், கடந்த ஆண்டு தமிழகத்தில் சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதாவது கடந்த 2019ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் மொத்தமாக 57,228 சாலை விபத்துக்கள் நடந்தன. இதில் 10,525 பேர் உயிரிழந்தனர். இதுவே 2020ம் ஆண்டில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 45,489 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8060 ஆக குறைந்துள்ளது. இதனை மேலும் குறைப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

Related Stories: