×

ஆயுத பூஜை விடுமுறையால் ஏலகிரிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்து சுற்றுலா தலங்களில் உள்ள பல்வேறு இடங்களை கண்டு களித்து மகிழ்ந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ஏலகிரி மலையானது நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதார தொழிலாக விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மேலும் ஊட்டி, கொடைக்கானல் போன்று ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் முதல் மீண்டும் திறக்கப்பட்டது.  இந்நிலையில் சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஆயுத பூஜைக்கு 4 நாட்கள் விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு படையெடுத்துள்ளனர். மேலும் விடுமுறையான நேற்று பாண்டிச்சேரி, கர்நாடகா, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, சென்னை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் தஞ்சமடைந்து இங்குள்ள படகுத்துறை சிறுவர் பூங்கா இயற்கை பூங்கா நிலாவூர் கதவு நாச்சி அம்மன் கோயில் முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு ரசித்தனர். மேலும் மிக முக்கியமான படகுத்துறையில் தங்களது குழந்தைகளுடன் சுற்றுலாவிற்கு வந்த பெரியவர்கள் படகில் சவாரி செய்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இது மட்டுமல்லாமல் தனியார் பொழுதுபோக்கு கூடங்களில் உள்ள பல்வேறு கண்காட்சிகள் விளையாட்டுப் போட்டிகள் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்டவைகளை கண்டு மகிழ்ந்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த சாலையோர கடை வியாபாரிகள் தற்போது கடைகள் அமைத்து வாழ்வாதாரத்தை பெருக்கி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் இங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கும் விடுதி, ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் போன்றவை நடத்தும் நபர்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் ஏலகிரி மலை சுற்றுலா தலத்தை ஊட்டி, கொடைக்கானல் போன்ற மிகப்பெரிய அளவில் சுற்றுலா தலமாக மேம்படுத்தவும் விலங்கியல் பூங்கா, தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சி உள்ளிட்டவைகளை உருவாக்கவும் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகளும் மலைவாழ் மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்ததால் 14 கொண்டை ஊசி மழை மலை சாலைகளில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தொடர்ச்சியாக ஏலகிரி மலைக்கு தொடர்ந்து பயணித்துக் கொண்டு இருந்தது.

Tags : Yelagirimalai ,Armed Puja , Due to the Armed Puja holiday Tourists congregate in Yelagirimalai
× RELATED ஆயுத பூஜை கொண்டாட்டம் திருஷ்டி...