தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி ஏன்?: கட்சி தொண்டர்கள் ஆதங்கம்: கட்சி தலைமை கவலை

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்களை அக்கட்சியின் தொண்டர்கள் ஆதங்கத்துடன் வெளியிட்டு வருகிறார்கள். இதனால் கட்சியின் தலைமை கவலை அடைந்துள்ளது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 95 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக வெறும் 5 சதவீத இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று படுதோல்வி அடைந்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் படுதோல்வி குறித்து அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் ஒரு இடத்தில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. 2021ம் ஆண்டு மே மாதம் நடந்த  சட்டமன்ற பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 234 இடங்களில் அதிமுக 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பறிகொடுத்தது. தற்போது, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை அதிமுக எதிர்க்கட்சியாக இருந்து சந்தித்தது.

ஆனாலும், மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.  சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, கட்சி சின்னத்தை பார்த்துதான் பொதுமக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் உள்ளாட்சி தேர்தலில், அந்தந்த பகுதியில் செல்வாக்கு உள்ள தலைவர்களை வைத்துதான் பொதுமக்கள் வாக்களிப்பார்கள். அப்படியென்றால், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் இருந்த அதிமுக இவ்வளவு பெரிய தோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து கட்சி தலைமை விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும். எடப்பாடி, 4 ஆண்டு காலம் தமிழகத்தில் முதல்வராக இருந்துள்ளார். கட்சி அவரது கட்டுப்பாட்டில்தான் தற்போது உள்ளது.  இவ்வளவு பெரிய தோல்விக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும்.

காரணம், கடந்த 4 ஆண்டுகளாக அதிமுகவை வழி நடத்தியவர்கள், அதிமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் யாரும் கட்சியை வளர்க்க எதுவும் செய்யவில்லை. , அதிமுகவின் 2 மற்றும் 3ம் கட்ட தலைவர்கள் கட்சி தலைமையை அணுகவே முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. அவர்களை சம்பாதிக்கவும் கட்சி தலைமை அனுமதிக்கவில்லை. கட்சிக்காரர்கள் என்றாலும், பணம் கொடுத்தால்தான் காரியம் ஆகும் என்ற நிலையை ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டனர். அதனால், அதிமுக தொண்டர்கள், 2 மற்றும் 3ம் கட்ட தலைவர்கள் கட்சிக்காக வேலை செய்யாமல் பின்வாங்கினர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தன்னை அதிமுக தலைவராக முன்னிலைபடுத்திக் கொண்டார். ஆனால் அவரை தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது. கட்சிக்குள் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி என இரண்டு கோஷ்டிகள் தற்போதும் நீடித்து வருவது் தோல்விக்கு ஒரு காரணம். அதிமுக கட்சிக்கு தொண்டர்கள் ஆதரவு பெற்ற ஒத்த தலைமை இருந்தால் மட்டுமே இனி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக தலைமையை குற்றம்சாட்டிதான் கடைசி நேரத்தில் பாமக கூட்டணியில் இருந்து வெளியேறியது. பாமக கூட்டணியை தக்க வைத்திருந்தால் செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கலாம். அதையும் கட்சி தலைமை சரியாக கையாளவில்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் சரி செய்தால் மட்டுமே விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அதிமுக ஓரளவு தாக்குப்பிடிக்க முடியும். கட்சி தொண்டர்கள் எதிர்ப்பால் கட்சி தலைமையும் கவலை அடைந்துள்ளது என்றார்.

Related Stories:

More
>