திருவில்லிபுத்தூரில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 7 பேருக்கு 70 ஆயிரம் அபராதம்

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 7 பேரிடம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.அவர்களிடமிருந்து இறந்த காட்டுப்பன்றி உடல், 4 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.விருதுநகர் அருகே உள்ள சத்திரெட்டியப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் வேட்டை நாய்களை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வன பாதுகாப்பு அதிகாரி மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில், வன அதிகாரி செந்தில் ராகவன் தலைமையில் நேற்றிரவு சத்திரெட்டியபட்டி பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், 7 பேர் வேட்டை நாய்களுடன் வனவிலங்குகளை வேட்டையாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்த இறந்த காட்டுப்பன்றியின் உடல், 4 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து பிடிபட்ட 7 பேரையும் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 5 பேர் விருதுநகர் அருகே உள்ள குமாரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது தும்ம நாயக்கம்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த 7 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: