×

மேலூர் அருகே 12 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

மேலூர் : மேலூர் அருகே 12 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய அணைக்கட்டை பொதுமக்கள் சென்று ரசித்து வருகின்றனர்.மேலூர் அருகே முன்னாள் அமைச்சர் கக்கன் காலத்தில் அழகர்மலையின் பின்புறம் உள்ள அடிவார பகுதியான கடுமீட்டான்பட்டியில் 27 அடி கொள்ளளவு கொண்ட அணைக்கட்டு கட்டப்பட்டது. இது பெரிய அருவி நீர்தேக்க அணைக்கட்டு என அழைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 700 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.தற்போதைய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய அருவி நீர்தேக்க அணைகட்டு, அதன் முழு கொள்ளளவான 27 அடி நீர் நிரம்பி மறுகால் பாய்ந்து ஓடுகிறது.

 பல ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பியுள்ளதால், மேலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து, ஆர்வத்துடன் அணையை பார்த்து ரசித்து மகிழ்கின்றனர். கடந்த ஆண்டு இந்த அணைகட்டை ரூ.1.90 கோடியில் பொதுப்பணித் துறையினர் புனரமைப்பு செய்துள்ளதால், தற்போது அணையில் நீர் தேக்கம் சகதிகளின்றி, முழு அளவில் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அணைக்கட்டிற்கு செல்லும் சாலையை அதிகாரிகள் சீர் செய்து, சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணையில் மறுகால் பாய்வதை இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Tags : Melur , Dam overflows after 12 years near Melur: Farmers happy
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!