×

10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு இல்லை: பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தாமல், நேரடியாக பொதுத் தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். நவம்பர் மாதம் தொடக்க நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து அதற்கான முன்னேற்பாடுகள் செய்வது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் பங்கேற்று பேசினார். மேலும், பள்ளிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

அதற்கு பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்களின் ஆய்வுக் கூட்டம் வழக்கமாக நடத்தப்படும். இந்தமுறை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்(சிஇஓ) மாவட்ட கல்வி அதிகாரிகளையும்(டிஇஓ) அழைத்து  ஆய்வுக் கூட்டம்  நடத்துகிறோம். இந்த ஆய்வு கூட்டத்தில், நவம்பர் 1ம் தேதியில் இருந்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளை பாதுகாப்பாக திறப்பது தொடர்பாக விவாதித்தோம். ஏற்கெனவே, நமது அதிகாரிகள் அதற்கான அனுபவம் பெற்றிருப்பதால், அவர்கள் அதை செய்வார்கள் என்பதால், அதை உறுதி செய்யும் வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அந்த அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கின்றனர். எந்த புகாரும் வராத வகையில் குழந்தைகளை பாதுகாப்புடன் இந்த துறை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கும். முகக் கவசம் அணிவதில் பிரச்னை இருந்தால், குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தங்கள் குழந்தைகளை அழைத்து செல்ல அனுமதிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் குழந்தைகளுக்கு தேவையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தாலும், இங்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி இருப்பதால் அதை அணிய வேண்டும்.

மழைக்காலம் வருவதால் பள்ளிகள் அனைத்தும் சீர் செய்யப்படும். நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதி. 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு த்தேர்வு நடத்துவது குறித்து நாங்கள் ஏற்கெனவே பேசியுள்ளோம். இனிமேல் காலாண்டு, அரையாண்டுத்  தேர்வுகளை நடத்த முடியாது. டிசம்பர் மாதம் மட்டும், இதுவரை நடத்தப்பட்ட பாடங்களை ஒருங்கிணைத்து ஒரு பயிற்சி தேர்வு நடத்தலாம் என்று ஆலோசித்து வருகிறோம். அதற்கு பிறகு பொதுத் தேர்வு நடத்தப்படும். வழக்கமாக மார்ச் மாதம் தேர்வு நடப்பது போலவே இந்த ஆண்டும் தேர்வு நடத்தப்படும்.

பள்ளிகளில் கழிப்பறை தூய்மை செய்வது தொடர்பாக, அந்தந்த ஊராட்சி பணியாளர்களை வைத்து செய்ய கேட்டுக் கொண்டுள்ளோம். ஆசிரியர் பணியிட மாறுதல் நடத்தப்பட உள்ள நிலையில், ஒரே பள்ளியில் 10 ஆண்டு 20 ஆண்டு பணியாற்றும் ஆசிரியர்களை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக சில கொள்கைகள் வ குக்கப்பட்டுள்ளது. அதற்காக 3 விதமான வரையறைகள் வைத்துள்ளோம். பணியிட மாறுதல் கவுன்சலிங் நடக்கும் போது அது குறித்து தெரிவிப்போம். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Tags : Minister ,Mahesh Poyamozhi , No quarterly and half-yearly exams for Class 10 and Plus 2 students: School Education Minister Mahesh Poyamoli
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி