×

டெல்டாவில் 5வது நாளாக விடிய விடிய மழை; 500 ஏக்கர் குறுவை பயிர் நாசம், மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்று மதியம் தொடங்கிய மழை இடி மின்னலுடன் அதிகாலை வரை தொடர்ந்தது. திருவாரூரில் மாலை 6 மணியிலிருந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை மிதமான மழையும், தஞ்சை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழையும் பொழிந்தது. திருச்சியில் விடிய விடிய தூறல் மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இடி, மின்னலுடன்  கனமழை கொட்டியது.

நீடாமங்கலம், சித்தமல்லி,  பரப்பனாமேடு, பூவனூர், ராயபுரம், ரிஷியூர் உள்ளிட்ட இடங்களில் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்கதிர்கள், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 100  ஏக்கர் நெற்பயிர், வல்லம்  அருகே சித்திரகுடி, வேங்கராயன்குடிக்காடு உள்பட ஏராளமான கிராமங்களில் அறுவடைக்கு தயாரான சுமார்  300 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளன. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம்  வகிக்கும் வேதாரண்யத்தில் 9000 ஏக்கரில்  830 சிறு உற்பத்தியாளர்கள் மூலம் ஆண்டுதோறும் 5  லட்சம் முதல் 6 லட்சம்  மெட்ரிக் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

நேற்று இரவு உப்பள  பகுதிகளில்  பெய்த மழையால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு  உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம்  கொள்ளிடம் அருகே கூழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர்  முத்து(45).  இவரும்,  இவரது மனைவி லட்சுமியும்(42) நேற்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு டூவீலரில் வீடு திரும்பினர். கூழையார்  கிராமம்  பெருமாள் கோயில் அருகே சாலையோரம் மழையின் காரணமாக அறுந்து  தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி டூவீலரில் சென்ற லட்சுமியில் கழுத்தில் பட்டதில் மின்சாரம் பாய்ந்து அங்கேயே இறந்தார்.

இதேபோல் குத்தாலம் அருகே திருவாவடுதுறை யாதவ தெரு சந்திரசேகர் மனைவி மாரியம்மாள்(40)  குப்பைகளை சுத்தம் செய்தபோது  வீட்டில் அறுந்து தொங்கிய ஒயரை தொட்டபோது  மின்சாரம் பாய்ந்து இறந்தார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள  எண்ணானி வயல் கிராமத்தை சேர்ந்தவர் தேவி(45). விவசாயக் கூலித் தொழிலாளி.  நேற்று மாலை வீடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்டார். அப்போது  மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே இறந்தார். 


Tags : Delta , 5th day of torrential rain in Delta; 500 acres of crop destroyed, power outage kills 3: Salt production affected in Vedaranyam
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை