×

ஏலகிரி மலையில் சாலையோரங்களில் மின் விளக்குகள், நிழற்கூடம் அமைக்க வேண்டும்-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் மலை சாலைகளில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சமின்றி பயணிக்க சாலைகளில் மின் விளக்குகளும், மழைக்காலங்களில் சாலையோரங்களில் ஆங்காங்கே நிழற்கூடங்களும் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களைப் போன்று ஏலகிரி மலையும் குளிர்ச்சி மிகுந்த ஒரு இடமாகவும், நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு இயற்கை எழில்கொஞ்சும் அழகையும் பெற்று ஏலகிரி மலை சுற்றுலா தளம் விளங்கி வருகிறது.

மேலும் இந்த ஏலகிரி மலை சுற்றுலா தளத்திற்கு செல்ல ஏலகிரி மலை அடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவு சாலைகளை கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு சாலைக்கும் கொடை வள்ளல்கள், தமிழ் புலவர்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகளை போன்று ஏலகிரி மலையில் 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை ஊராட்சி ஆக செயல்படுகிறது.

இங்கு சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் முன்னிலையாக இருந்து வருகிறது. மேலும் இங்கு படகுத்துறை, இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, டெலஸ்கோப், முருகன் கோயில், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, மலைவாழ் மக்களின் குலதெய்வ கோயில்கள் உள்ளிட்டவைகள் இங்கு காணக்கூடிய முக்கிய இடங்களாக இருந்து வருகிறது.

இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதைத் தவிர்த்து மலைவாழ் மக்களின் கலாசார நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் போன்றவை அனைவரையும் கவர்ந்து இழுக்க செய்கிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலமான மே மாதத்தில் கோடை விழா கொண்டாடப்படுகிறது.
அப்போது ஊட்டி கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மலர்கள் கொண்டு வரப்பட்டு மலர் கண்காட்சி உள்ளிட்ட துறை அதிகாரிகளின் பல்வேறு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இரண்டு நாள் நடத்தப்படும் கோடை விழா நாட்களில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள், டாக் ஷோ கலைநிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, கலாச்சார போட்டிகள் உள்ளிட்டவை அனைவரையும் கவர்ந்து இழுக்க செய்கிறது.

இதனால் பல்வேறு பகுதியைச் சார்ந்த சுற்றுலா பயணிகள் இரவு பகல் பாராமல் விடுமுறை நாட்களில் ஏலகிரி மலையில் தஞ்சம் அடைகின்றனர். இதனால் 14 கிலோ மீட்டர் மலை சாலை கடக்க வேண்டிய சூழ் நிலை இருந்து வருகிறது. ஆனால் இந்தப் பதினான்கு கிலோ மீட்டர் மலை சாலைகளில் சாலையோரங்களில் மின் விளக்குகளோ, நிழற்கூடங்களோ எதுவும் இல்லாத நிலை இருந்து வருகிறது.

இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பயணம் செய்ய மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளும் மலைவாழ் மக்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் மலை சாலையை கடந்து செல்லும்போது திடீரென மழை பெய்தால் நின்று செல்ல எந்த ஒரு நிழற்கூடமும் சாலையோரங்களில் அமைக்கப்படவில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் மலை சாலைகளில் மழை பெய்தால் முழுவதுமாக நனைந்து கொண்டே பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஒரு சிலர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறக்கவும் செய்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தமிழகத்தின் சுற்றுலா தலமாக விளங்கிவரும் ஏலகிரி மலைக்கு செல்லும் சாலையோரங்களில் ஆங்காங்கே மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் மழைக்காலங்களில் பொதுமக்களும் வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் நின்று செல்ல ஆங்காங்கே நிழற்கூட வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Yelagiri hills , Jolarpet: Electric lights on the mountain roads on the Yelagiri hills to enable motorists to travel without fear at night.
× RELATED ஏலகிரி மலையில் குண்டும், குழியுமாக...