ஆசிரியர் பணி வயது வரம்பை உயர்த்தக்கோரிய மனு தள்ளுபடி

மதுரை: ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை உயர்த்தக்கோரி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திரக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.தவமணி, தேனி கீழவடகரையைச் சேர்ந்த எம்.பாலமுருகன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க தகுதி பெற்றுள்ளோம். தமிழகத்தில் 2012 வரை வேலைவாய்ப்பு அலுவலக பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், 2012ல் எழுத்துத்தேர்வு மற்றும் பணி அனுபவத்துக்கான கருணை மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக ஆசிரியர்களை தேர்வு செய்ய தமிழக அரசு கொள்கை முடிவெடுத்தது. இந்த நியமன முறையில் 57 வயது வரை உள்ளவர்களும் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த சூழலில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்துக்கு பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 40 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது 45 ஆகவும் நிர்ணயம் செய்த தமிழக அரசு, 30.1.2020ல் அரசாணை பிறப்பித்துள்ளது. தற்போது எங்களுக்கு முறையே 49, 48 வயதாகிறது. இந்த அரசாணையால் எங்களால் நேரடி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் நேரடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், முதல்நிலை உடற்கல்வி ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் பயிற்றுநர் நியமனம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் 9.9.2021ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் 45 வயதுக்குள் உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

இதற்கு ஆன்லைனில் 17.10.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது. அரசு பாலிடெக்னிக், அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 57 இருக்கும்போது பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு அதிகபட்ச வயதாக 45 நிர்ணயத்திருப்பது சட்டவிரோதம். எனவே, அதிகபட்ச வயது வரம்பு அடிப்படையில் நேரடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள தடை விதித்தும், அதிகபட்ச வயது வரம்பு நிர்ணய அரசாணை செல்லாது என அறிவித்தும், எங்களை நேரடி நியமனத்தில் பங்கேற்க அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories:

More
>