நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீதான 868 வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு ஆணை வெளியீடு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின் போது நீட் தேர்வை எதிர்த்தும், டாஸ்மாக் கடைகளை எதிர்த்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த வழக்குகளை திரும்ப பெறவுள்ளதாக கடந்த மாதம் 13ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, நீட் மற்றும் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு: இந்த போராட்டங்களின்போது தேச ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் இதில் அடங்காது. நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் விசாரணையில் உள்ள 341 வழக்குகள், நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள 105 வழக்குகள் என மொத்தம் 446 வழக்குகள் வாபஸ் பெறப்படுகிறது.

டாஸ்மாஸ் கடைகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் விசாரணையில் உள்ள 339 வழக்குகள் மற்றும் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் 83 என மொத்தம் 422 வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. ஆக மொத்தம் 868 வழக்குகளை வாபஸ் பெறப்படுகிறது. போலீஸ் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ள வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது.

நீதிமன்றங்களில் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 321ன்கீழ் அரசு குற்றவியல் வக்கீல்களால் உரிய சட்ட விதிகளின்படி வாபஸ் பெறப்படும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>