வார விடுமுறையை கொண்டாட வைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆண்டிபட்டி : வார விடுமுறையை கொண்டாட ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.தென்தமிழக மக்களுக்கு பிடித்த சுற்றுலுாத்தலமாக தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா உள்ளது. வைகை அணை பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல், போன்ற வெளிமாவட்ங்களில் இருந்தும், கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களிலும், விஷேச நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். இந்த பூங்காவில் வலது கரை பூங்கா, இடது கரை பூங்கா என பிரிக்கப்பட்டு அதில் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது.

இங்கு சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி பூங்கா, பயில்வான் பார்க், யானை சறுக்கல், ஆங்காங்கே நீருற்று, புல் வெளிகள், ஒய்வு எடுக்கும் பகுதி, மலையில் செய்த வரைபடங்கள், உல்லாச ரயில், இசைநடன நீருற்று உள்ளிட்டபல்வேறு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது. பூங்காவிற்கு ஒரு நபருக்கு 5 ரூபாயும், சிறுவர்களுக்கு 3 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

இந்த வைகை அணை பூங்கா கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்தது. இதனால் இந்த ஆண்டு சுமார் 4 மாதங்களுக்கும் மேல் பூங்கா மூடப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் வைகை அணை பூங்காவை சுற்றி பார்க்க முடியாமல் தவித்து வந்தனர். பின்னர் கடந்த மாதத்திற்கு முன்பு பூங்கா திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பூங்காவில் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் நிறைந்திருந்தனர். சிறுவர்கள் ஊஞ்சல், சறுக்கல், யானை சறுக்கல், ராட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் விளையாடி மகிழ்ந்தனர். வைகை அணை பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து வீட்டிலேயே உணவு சமைத்து கொண்டு வந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

Related Stories:

More