வேறு சமூக மாணவியை காதலித்த ஆட்டோ டிரைவர் ஆணவ கொலை: கும்பகோணத்தில் பயங்கரம்; கிராம மக்கள் சாலை மறியல்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூரை சேர்ந்த இளங்கோவன் மகன் பிரபாகரன் (22). ஆட்டோ டிரைவர். கும்பகோணம் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (46). இவரது மகள் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரபாகரனும், அந்த மாணவியும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு காமாட்சிபுரம் கடைவீதியில் நின்றிருந்த பிரபாகரனுக்கும், மணிகண்டனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

அப்போது மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபாகரனை சரமாரியாக குத்தினார். தடுக்க முயன்ற பிரபாகரனின் சகோதரர் விக்னேசுக்கும் (20) காயம் ஏற்பட்டது.  இதில் பிரபாகரன் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விக்னேஷ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிரபாகரனின் சகோதரி பிரியங்கா, பந்தநல்லூர் போலீசில் கொடுத்த புகாரில், பிரபாகரன் கார் டிரைவராக கார்த்தி (26) என்பவரிடம் வேலை செய்கிறார். தினமும் இருவரும் மாலை வேளையில் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து மது அருந்துவர்.

கார்த்தியும், பெண்ணின் தந்தை மணிகண்டனும் நண்பர்கள். இதனால் பிரபாகரன் இருக்கும் இடத்தை கார்த்தி மூலம் அறிந்து வந்து கொலை செய்துள்ளார். எனவே இருவரையும் கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து பிரபாகரனின் உறவினர்கள், விடுதலை சிறுத்தை கட்சியினர் உள்ளிட்ட 200 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அளித்த உறுதியின்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து பெண்ணின் தந்தை மணிகண்டன், அவரது நண்பர் கார்த்தி ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories:

More