×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 3,326 பெண்கள் இளம் வயதில் கருத்தரிப்பு: 228 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியும் ஒரு வழக்குப்பதிவு கூட இல்லை; ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல்

சேலம்: தமிழகம் முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில் 11,533 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 3,326 பெண்கள், இளம் வயதில் கருத்தரித்துள்ள அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. மேலும், அங்கு 228 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டும், ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச வயது 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச வயதுக்கு கீழ் திருமணம் செய்து வைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை, குழந்தைகள் பாதுகாப்பு குழுமம், சைல்டு லைன் உள்ளிட்டவை இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இருந்த போதிலும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், குழந்தை திருமணங்களும், அதன் மூலம் உருவாகும் இளம் வயது கர்ப்பம் தரித்தலும், முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக, பல மாவட்டங்களில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை நடந்த குழந்தை திருமணங்கள், அவற்றில் தடுத்து நிறுத்தப்பட்டவை மற்றும் இளம் வயது கருத்தரிப்பு குறித்து, சென்னை வண்டலூரைச் சேர்ந்த சமூக கல்வி நிறுவனத்தின் திட்ட மேலாளர் பிரபாகர் என்பவர், ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றுள்ளார்.

அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் கடந்த 2015லிருந்து 2020 வரை, 11,553 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக, தர்மபுரி மாவட்டத்தில் 962 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் 734, சேலம் மாவட்டத்தில் 720, திருவண்ணாமலை 712, திண்டுக்கல் 683, பெரம்பலூர் மாவட்டத்தில் 674 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம், குழந்தை திருமணங்களுக்கு காரணமானவர்கள் மீது வெறும் 586 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பெரம்பலூரில் மட்டும் 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 228 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு வழக்கு கூட பதிவு செய்யாத அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் 399 திருமணம் நிறுத்தப்பட்டு, ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. இருஒருபுறம் இருக்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும், 3,326 பெண்கள் இளம்வயதில் கர்ப்பமாகியுள்ளனர். அதிகபட்சமாக, கடந்த 2020ல் மட்டும் 830 பெண்கள் இளம்வயதில் கர்ப்பமாகியுள்ளனர். சுகாதாரத்துறையின் பதிவில் உள்ள எண்ணிக்கை இவ்வாறு இருந்தாலும், உண்மை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அந்த மாவட்டத்தில் அதிகபட்சமாக காவேரிபட்டணம் ஒன்றியத்தில் 729 சிறுமிகளும், அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் 348 பெண்களும் இளம் வயதில் கர்ப்பமடைந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக கல்வி நிறுவனத்தின் திட்ட மேலாளர் பிரபாகர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில், 11,553 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், அதன் தொடர் நடவடிக்கையாக வழக்குப்பதிவு என்பது சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளது. மேலும், இவ்வளவு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 3,326 பேர் இளம் வயதிலேயே கர்ப்பம் தரித்திருப்பது பல்வேறு கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தை திருமணம் குறித்த தகவல் வந்தவுடன், சமூக நலத்துறையினர் நேரடியாக சென்று விசாரணை செய்கின்றனர். அப்போது ஒரு பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டு, அந்த திருமணத்தை நிறுத்திவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், பல இடங்களில் அடுத்த ஒரு வாரத்தில் அந்த திருமணம் நடந்து விடுகிறது.

மாவட்ட சமூகநல அலுவலர்கள் பல திட்டப் பணிகளை பார்ப்பதால், குழந்தை திருமண தடுப்பு அலுவலராக செயல்பட முடியவில்லை. அதற்கான பணியாளர்களும் மாவட்ட அளவில் நியமிக்கப்படவில்லை. கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலத்துறையினர், கடந்த 6 வருடமாக குழந்தை திருமணத்தை முழுமையாக தடுத்து நிறுத்த, பிற துறையினருடன் இணைந்து செயல்படவில்லை என்பது தெளிவாக தெரிய வருகிறது. எனவே தமிழக அரசு இப்பிரச்னையின் தீவிரம் கருதி, ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த கூடிய சிறப்பு அலுவலரை, நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


சேலம் உள்பட 4 மாவட்டங்களில், கடந்த 6 ஆண்டுகளில் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்களும், அதனை தொடர்ந்து பதிவு ெசய்யப்பட்ட வழக்குகளும்.
மாவட்டம்    நிறுத்தப்பட்ட திருமணம்    வழக்குப்பதிவு    
சேலம்    720    4
நாமக்கல்    449    20
தர்மபுரி    902    31
கிருஷ்ணகிரி    228    0
மொத்தம்    2,299    55

* தாய்-சேய் உயிரிழப்புகள் அதிகமாகும்
இதுகுறித்து அரசு மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘‘பொதுவாக 10 முதல் 19 வயது வரை உள்ள காலம், வளரிளம் பருவம் என கூறப்படுகிறது. அந்த பருவத்தில் தான், உடலில் எலும்பு, தசை போன்ற  உறுப்புகள் வளர்ச்சியடையும். அப்போது, பெண்ணுக்குப் புரதச்சத்து அதிகம் தேவைப்படும். அந்தச் சமயத்தில் பெண்கள் கர்ப்பம் தரிப்பதால் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு, சிக்கல்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக, குறைபிரசவம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும் அதிக ரத்தப்போக்கு, பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி வெளியே வர முடியாததால், தாய் சேய் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகின்றன. எனவே, இளம் வயது திருமணங்களை தடுப்பது அவசியம்,’’ என்றார்.


Tags : Krishnagiri district ,RTI , Krishnagiri district has 3,326 women conceiving at a young age in the last 6 years: 228 not even a single case of child marriage has been stopped; Shocking information by RTI
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...