×

கொசஸ்தலை ஆற்றின் வழியாக பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 1000 கன அடி உபரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை: பூண்டி நீர்த்தேக்கத்தில் மழைநீர் வரத்து காரணமாக நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று 2 மதகுகள் வழியாக 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. இதில் 3231 மில்லியன் கன நீர் சேமிக்கலாம். நேற்றைய நிலவரப்படி 33.95 அடி உயரமும், 2807 மில்லியன் கன அடியாகவும் நீர் இருப்பு இருந்தது. மேலும், பூண்டி ஏரிக்கான வரத்து கால்வாயில் வெள்ள நீர், பருவமழையினால் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரும் 1600 கன அடி நீர் வந்தது. இதனால் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் விரைவில் அணைக்கு வரும் நீர் வரத்து 34 அடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெள்ள நீர் வரத்தான 1000 கன அடிநீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதன் அடிப்படையில் அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றம் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி நீர்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து பிற்பகல் 2 மணிக்கு திறக்க முடிவு செய்யப்பட்டது. நீர் திறப்புக்கு முன்னதாக குறிப்பிட்ட நேரத்தில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. இதையடுத்து 3 மற்றும் 13 ஆகிய மதகுகள் வழியாக தலா 500 கன அடி நீர் வீதம் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் திறந்து விடப்பட்டது. இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. தற்போது, இதே ஆண்டில் 2வது முறையாக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் முரளிதரன் கூறுகையில், `ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதாலும், மழைநீர் வரத்து உள்ளதாலும் பூண்டி நீர்த்தேக்கத்திற்கான வரத்துக்கால்வாயின் மூலம் தற்போது 1600 கன நீர் வரத்து உள்ளது. நீர்மட்டம் உயரும் என்பதால், முன்னெச்சரிக்கையாக கொசஸ்தலை ஆற்றில் 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களுக்கு கொண்டு செல்லப்படும். புழல் நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 21.2 அடியில் தற்போது 19.42 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அதேபோல் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 21.2 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

எனவே 2 நீர்த்தேக்கங்களில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதாலும் மழை நீர் வரத்து உள்ளதாலும் பருவ மழையினால் பெறப்பட உள்ள மழைநீர் நீக்குவதற்கும் நீர்த்தேக்கத்தின் கதவுகள் மூலமாக வெள்ள நீரினை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும் நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்து திறந்துவிடப்படும் நீரை புழல் மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களுக்கு கொண்டு செல்லாமல் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது,’ என்றார்.

இந்நிலையில் கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர் தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல் சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்போது, பாலாறு உபவடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி செயற்பொறியாளர் ஜி.கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Boondi Reservoir ,Kosasthalai River , 1000 cubic feet of surplus water released from Boondi Reservoir via Kosasthalai River: Warning to Coastal Residents
× RELATED எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவில்...