பிஇ கவுன்சலிங் 2ம் சுற்று முடிந்த நிலையில் 72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை: நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி

சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளுக்கான கவுன்சலிங்கில், இதுவரை 2 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் 72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் தற்போது நடந்து வருகிறது. அதில் முதற்கட்டமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கவுன்சலிங் நடந்தது. அதற்கு பிறகு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடந்தது. 31,662 பேர் இட ஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் மொத்தம் உள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 131 கல்லூரிகளில் 1 சதவீதம் கூட மாணவர்கள் சேரவில்லை.  5 சதவீதத்துக்கும் குறைவாக 248 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

306 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவும், 342 கல்லூரிகளில் 25 சதவீதத்துக்கும் கீழும், 98 கல்லூரிகளில் 25 சதவீதத்துக்கும் கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கிண்டி, எம்ஐடி உள்ளிட்ட 15  முன்னணி பொறியியல் கல்லூரிகளில் 98 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 33 கல்லூரிகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக சேர்ந்துள்ளனர். 61 கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிமாக சேர்ந்துள்ளனர். இது தவிர பெரும்பாலான  கல்லூரிகளில் மாணவர்கள் சேரவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில் 3 மற்றும் 4ம்கட்ட கவுன்சலிங் இன்று தொடங்க உள்ளது. இதற்கு பிறகாவது மேற்கண்ட நிரம்பாத கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வார்களா என்று தெரியவரும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேராமல் புறக்கணித்த கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் 22 கல்லூரிகள் மூடப்பட்டன.  இந்த ஆண்டும் 21 கல்லூரிகள் மூடப் போவதாக அண்ணா பல்கலைக்கு கடிதம் கொடுத்துள்ளன. இதனால் இந்த ஆண்டு பிஇ பிடெக் படிப்புக்கான இடங்கள் அதிக அளவில் காலி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: