×

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் அடிக்கடி அரங்கேறும் மாணவர்கள் மோதல்: பயணிகள் பீதி

நாகர்கோவில்: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் இடையே அடிக்கடி நடக்கும் மோதல் சம்பவங்கள் பயணிகளை பீதி அடைய செய்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் கடந்த மாதம் செப்டம்பரில் தான் திறக்கப்பட்டு உள்ளன. தற்போது 9, 10, 11, 12ம் வகுப்புகள் மட்டும் செயல்படுகின்றன. நவம்பரில் இருந்து 1 முதல் 8ம் வகுப்பு வரை திறக்கப்படும் என்று தெரிகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டதால் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையம் மீண்டும் களை கட்ட தொடங்கி உள்ளது.

காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள் இடையே பஸ் நிலையத்தில் வைத்து அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் மட்டும் இரு நாட்கள் மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு, கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். பஸ் நிலையத்தில் இருந்த வியாபாரிகள், போக்குவரத்து அதிகாரிகள் தட்டிக்கேட்டாலும் அவர்களையும் மிரட்டும் வகையில் பேசுகிறார்கள்.

தற்போதுள்ள நிலையில் மாணவர்கள் மீது கை வைத்தால் ஏதாவது விபரீதமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால், அதிகாரிகளும் கப்சிப் ஆகி விடுகிறார்கள். மாணவர்களின் மோதல் சம்பவங்கள் பயணிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காதல் விவகாரத்தில் மோதல் நடக்கிறதா? அல்லது வேறு காரணங்களா? என்பது தெரிய வில்லை. முன்பெல்லாம் காலை மற்றும் மாலை வேளைகளில் பஸ் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால் தற்போது இந்த கண்காணிப்புகள் குறைந்துள்ளன. கேமராக்கள் இருந்தும் கூட,  அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பெரும்பாலும் பீக் அவர்ஸ் எனப்படும் காலை மற்றும் மாலை வேளைகளில் போலீசார் இருப்பது இல்லை. மாணவிகள், இளம்பெண்களிடம் ஈவ்டீசிங்கை தடுக்க மாறு வேடங்களில் பெண் போலீசார் கண்காணிக்கும் நடவடிக்கைகளும் இருந்தன. அதுவும் தற்போது நடைமுறையில் இல்லை. காவல்துறையினருக்கு பல்வேறு பணிச்சுமைகள் உள்ளதால், இது போன்ற பாதுகாப்பு பணிகளில் ஆர்வம் காட்ட முடியாத நிலை உள்ளது.

இதனால் விபரீதங்களும் நடக்க தொடங்கி உள்ளன. எனவே இதை கட்டுப்படுத்தும் வகையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அண்ணா பஸ் நிலையத்தில் போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இரவு 9 மணி வரை இளம்பெண்கள் வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து போதிய அடிப்படை வசதிகளை செய்வதுடன், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

போலீசில் ஒப்படைப்பு
அண்ணா பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், பள்ளி செல்லாமல் சீருடையில் மாணவர்கள் சிலர் காலை வேளையில் சுற்றி திரிந்தனர். அவர்களை பஸ் நிலையத்தில் இருந்த போக்குவரத்து அதிகாரிகள் விசாரித்த போது அவர்களிடம் பதில் சொல்லாமல் மாணவர்கள் ஓட முயன்றனர். அவர்களை அங்கிருந்த அதிகாரிகள் பிடிக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் சேர்ந்து,  மாணவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில்  மாணவர்கள் நாகர்கோவிலில் உள்ள பிரபல பள்ளியில் 11, 12 ம் வகுப்பு படித்து வருபவர்கள் என்பதும், பள்ளியை கட் செய்து விட்டு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவர்களை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஒப்படைத்தனர்.

டிரைவர்கள், கண்டக்டர்கள் புலம்பல்
நாகர்கோவிலில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயங்கும் பஸ்களில் செல்லும் டிரைவர்கள், கண்டக்டர்கள் சிலர் கூறுகையில், பஸ்களில் மாணவர்கள் பயணித்தாலே எங்களுக்கு தான் பயமாக இருக்கிறது. அவர்கள் செய்யும் செய்கைகள் மற்ற பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. போதை தலைக்கேறிய நிலையில் புத்தக பையுடன் பஸ்சில் உறங்குவது, வாந்தி எடுப்பது என எல்லை மீறிய செய்கைகள் உள்ளன. இப்போதைய கால கட்டத்தில் எதுவும் செய்ய முடியாது. அப்படி ஏதாவது கண்டித்து பிரச்சினை ஏற்பட்டால் எங்கள் மீது தான் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றனர்.

Tags : Nagargo , Students clash frequently at Nagercoil bus stand: Passenger panic
× RELATED சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத்...