நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நிறத்தில் உடை: யூனியன் வங்கி உத்தரவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்

சென்னை : நவராத்திரியின் ஒன்பது நாட்களும் உடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு, மக்களவை மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சு.வெங்கடேசன் இன்று (அக். 09) தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மைய அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் (நவீன மயம்) ஏ.ஆர். ராகவேந்திரா என்பவர் இப்படி ஒரு சுற்றறிக்கையை 01.10.2021 அன்று வெளியிட்டுள்ளார்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் உடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டுமாம். விடுமுறை நாளாக இருந்தாலும்... யார் இவருக்கு அதிகாரம் தந்தது! ஊழியர் விதிமுறைகளில் எந்த சரத்தின் கீழ் இந்த சுற்றறிக்கையை அவர் விடுத்துள்ளார்?

நவராத்திரியை நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அது அவர்களின் விருப்பம். தனிப்பட்ட உரிமை. ஆனால், எல்லோரும் கொண்டாடியாக வேண்டும், இன்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அதிகார மீறல். அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்துமீறல்.

நிதி அமைச்சகம், யூனியன் வங்கி சேர்மன் உடனடியாக தலையிட வேண்டும்! சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும்! சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>