×

இஷான், சூரியகுமார் அதிரடி வீண் நடப்பு சாம்பியன் மும்பை வெளியேற்றம்

அபுதாபி: ஐதராபாத் அணியுடனான லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மும்பை அணி 42 ரன் வித்தியாசத்தில் வென்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை முதலில் பேட் செய்தது. மொத்த ரன் ரேட்டில் கொல்கத்தா அணியை பின்னுக்குத் தள்ளி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், 171 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற இமாலய சவாலுடன் மும்பை அணி களமிறங்கியது. ரோகித், இஷான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவரில் 80 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர்.

குறிப்பாக, இஷான் ஆட்டத்தில் அனல் பறந்தது. பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட அவர் 16 பந்திலேயே அரை சதம் அடித்து மிரட்டினார். ரோகித் 18 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ஹர்திக் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஷான் 84 ரன் (32 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி உம்ரான் மாலிக் பந்துவீச்சில் சாஹாவிடம் பிடிபட்டார். சூரியகுமார் யாதவ் ஒரு முனையில் ருத்ரதாண்டவமாடி  24 பந்தில் அரை சதம் அடித்ததுடன், மும்பை அணி ஸ்கோர் 200 ரன்னை தாண்டி எகிற உதவினார். அவர் 82 ரன் (40 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார்.

மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன் குவித்தது. ஐதராபாத் பந்துவீச்சில் ஹோல்டர் 4, ரஷித், அபிஷேக் தலா 2, உம்ரான் 1 விக்கெட் வீழ்த்தினர். உம்ரான் நேற்று அதிவேக பந்துவீச்சை பதிவு செய்தார் (152.95 கி.மீ.). மும்பை அணியும் ஐபிஎல் தொடரில் தனது அதிகபட்ச ஸ்கோரை எட்டியது. முன்னதாக 2017 சீசனில் 223 ரன் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. அடுத்து களமிறங்கிய ஐதரபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்து 42 ரன் வித்தியாசத்தில் தோற்றது. மணிஷ் பாண்டே அதிகபட்சமாக 69 ரன் (41 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். ஜேசன் ராய் 34 ரன், அபிஷேக் சர்மா 33 ரன் எடுத்தனர்.

மும்பை தரப்பில் பும்ரா, நீசம், நைல் தலா 2 விக்கெட் எடுத்தனர். ஐதராபாத் அணியை 65 ரன்னுக்குள் சுருட்டத் தவறியதால், மும்பை அணி 5வது இடம் பிடித்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த டிசி-சிஎஸ்கே ஆகியோரில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதிபெறும். தோற்கும் அணி,  3, 4ம் இடம் பிடித்த ஆர்சிபி-கேகேஆர் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை சந்திக்கும். அதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு இரண்டாவது அணியாக தகுதிபெறும்.


Tags : Ishaan ,Suriyakumar ,Action ,Mumbai , Ishaan, Suriyakumar, Champion, Mumbai, IPL
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை...