×

காஞ்சி, செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து சம்மந்தப்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது.  தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல், மாநில தேர்தல் ஆணையத்தால் கடந்த செப் 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இதில் சம்மந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். பிறகு முதல்கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதத்தினை ேதர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதில், காஞ்சிபுரத்தில் 80%; செங்கல்பட்டு-67%; விழுப்புரம்-81.36%; கள்ளக்குறிச்சி-72%; வேலூர்-67%; ராணிப்பேட்டை-81%; திருப்பத்தூர்-78%; திருநெல்வேலி-69%; தென்காசி-74% என மொத்தம் 74.37% சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. முன்னதாக சம்மந்தப்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது. மேலும் நேற்று காலை 10 மணி முதலே சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைச் சுற்றி சுமார் 5 கிமீ சுற்றளவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இவை நாளை நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குச்சாவடி பணி ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று காலை 11 மணி முதல் வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் மற்றும் 13 வகையான கொரோனா தடுப்பு பணிகளுக்கான பொருட்கள் ஆகியவற்றுடன், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டனர். வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினர், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து 39 ஒன்றியங்களிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பெட்டிகள், 35 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. வரும் 12ம் தேதி காலை 8 மணிக்கு 74 மையங்களில் வாக்கு எண்ணிக்கையானது தொடங்குகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

Tags : Kanji ,Sengalupatta , Local elections
× RELATED ஆலய வழிபாட்டின் அவசியம்!