×
Saravana Stores

ராஜஸ்தானை சுருட்டி வீசி பிளேஆப் சுற்றில் கேகேஆர்: கில்-வெங்கடேஷ் எங்கள் பிரகாசமான ஒளி: கேப்டன் மோர்கன் பாராட்டு

ஷார்ஜா: ஐபிஎல் தொடரில் சார்ஜாவில் நேற்றிரவு நடந்த 54வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மான்கில் 56(44பந்து), வெங்கடேஸ் 38, திரிபாதி 21, நாட்அவுட்டாக தினேஷ்கார்த்திக் 14, மோர்கன் 13 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் 16.1 ஓவரில் 85 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா 86 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் பேட்டிங்கில் ராகுல் திவாதியா அதிகபட்சமாக 44, ஷிவம் துபே 18 ரன் எடுக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் ஷிவம் மாவி 3, பெர்குசன் 3 விக்கெட் எடுத்தனர். ஷிவம் மாவி ஆட்டநாயகன் விருது பெற்றார். 14வது போட்டியில் 7வது வெற்றியை பெற்ற கொல்கத்தா 14 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றை 99 சதவீதம் உறுதி செய்துவிட்டது. 9வது தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் 7வது இடத்துடன் திருப்திஅடைந்தது.

வெற்றிக்கு பின் கொல்கத்தா கேப்டன் மோர்கன் கூறியதாவது: டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. கில், வெங்கடேஷ் எங்களுக்கு அருமையான தொடக்கம் அளித்தனர். சீசனின் 2வது பாதியில் அவர்கள் இருவரும் எங்களின் பிரகாசமான ஒளி. மிடில் ஆர்டரில் ஆக்ரோஷமான ஆட்டத்தால் நல்ல ஸ்கோர் எடுத்தோம். ரஸல் இடத்தில் ஷாகிப் தனது பங்களிப்பை வழங்கினார். இன்றிரவு நாங்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டோம். நாங்கள் வெற்றி பெற தகுதியானவர்கள். ரஸல் வேகமாக குணமடைந்து வருகிறார். பிளேஆப் சுற்றில் அவர் ஆடுவார், என்றார். ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், பேட்டிங்கிற்கு இது சாதகமான பிட்ச். எங்களிடம் உள்ள பேட்டிங் வரிசை மூலம் எளிதாக துரத்த முடியும். ஆனால் நாங்கள் திட்டமிட்டதை நிறைவேற்ற முடியவில்லை, என்றார்.

Tags : Gill ,Venkatesh ,Rolling Rajasthan , ஐபிஎல்
× RELATED புனேவில் 2வது டெஸ்ட்; பன்ட், கில் விளையாட தயார்…! பயிற்சியாளர் தகவல்