நீர்பாசனத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி முறைகேடு புகார் எடியூரப்பா உதவியாளர் வீட்டில் ஐடி ரெய்டு : பல கோடி சொத்து ஆவணங்கள், தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல்

பெங்களூரு: நீர்பாசனத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி  முறைகேடு நடந்ததாக  அளிக்கப்பட்ட புகாரில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உதவியாளரின் வீடு  மற்றும் பொறியாளர்கள், கான்ட்ராக்டர்கள், தொழிலதிபர்கள், ஆடிட்டர்கள்  வீடு, அலுவலகம் உள்பட  50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை  அதிகாரிகள்  நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய்  மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் தங்கம், வைர நகைகளை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா,  ஆட்சியில் கிருஷ்ணாபாக்கியா, கங்காவதி உள்பட நீர் நிலைகள் நீர்பாசனத்துறை  வளர்ச்சி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டது.

இதில்  கணக்கு தணிக்கை குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் போலி கணக்குகளை  சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து பொருட்களும் எடியூரப்பாவின் உதவியாளரான உமேஷ் மூலமாக வாங்கப்பட்டு, கூடுதல் விலை போட்டு போலி பில்லை அரசுக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மாநில அரசுக்கு நீர்பாசனத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த  முறைகேடு மற்றும் வருமான வரி ஏய்ப்பு குறித்து வருமான வரித்துறைக்கு ரகசிய  புகார் சென்றது.  அதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உதவியாளர் உமேஷ் உள்பட பலரின் வீடுகளில் 120க்கும் அதிகமான காரில், வருமான வரி அதிகாரிகள் ராஜாஜிநகரில் உள்ள  எடியூரப்பாவின் உதவியாளர் உமேஷின் வீடு உள்பட 50க்கும் அதிகமான இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.

அதிகாலை  5 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை நிறைவடைந்தது. இதில் பல கோடி ரூபாய்  மதிப்பிலான தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நிலம், வீடுகள் மற்றும் விளை  நிலங்கள், கட்டுமான நிறுவனங்கள் உள்பட பல்வேறு அசையா சொத்துகளின் ஆவணங்களை  வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை குறித்து  எதிர்கட்சிகள் கூறுகையில், `ஏற்கனவே எடியூரப்பா மற்றும் அவரது மகன் மீது  நீர்பாசனத்துறை உள்பட பல்வேறு துறைகள் தொடர்பான மோசடி புகார் வந்தது.  உட்கட்சியை சேர்ந்தவர்களே குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால்  கட்சி மேலிடம் தலையிட்டு நடவடிக்கை எடுத்தது. தற்போது அவர்கள் கட்சிதான்  ஆட்சியில் உள்ளது. இந்த வருமான வரித்துறை சோதனை அவர்களை ஒன்றும் செய்யாது.  இந்த சோதனை வெறும் கண்துடைப்பு நாடகமே’ என்றனர்.

Related Stories: