35 ஆக்சிஜன் ஆலைகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: பிரதமர் கேர் நிதியின் கீழ் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 35 ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். கொரோனா தொற்றின்போது நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. மருத்துவமனைகளில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து மருத்துவ தேவைக்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற அபாயகரமான சூழல் ஏற்படுவதை தடுப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்தது. பிரதமர் கேர் நிதியின் மூலமாக இதனை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

இதனை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்சில் நடந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் கேர் நிதியின் மூலம் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள  35 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை  மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய அவர், ‘‘இந்த 35 புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுடன்  சேர்த்து, நாடு முழுவதும் 1150க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் இயங்குகின்றன. நாடு முழுவதும் 93 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமைக்குரிய விஷயமாகும். இந்த எண்ணிக்கை விரைவில் 100 கோடியை தாண்டும்,” என்றார்.

Related Stories: