×

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் 675 கிராம் தங்கம் கடத்தி வந்த சென்னை நபர் கைது

மீனம்பாக்கம்: மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திவந்த பயணி சிக்கினார். 10 ஆயிரம் போதை மாத்திரைகளையும் கைப்பற்றினர். சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அனுப்பினர். சென்னையை  சேர்ந்த சக்திகுமார் கிருஷ்ணசாமி(29) என்பவர் சுங்கத் தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றார். அப்போது அவர் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டதால் அவரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை தனிஅறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதனை செய்தபோது உள்ளாடையில் 4 பிளாஸ்டிக் டப்பி மறைத்து வைத்திருந்தார். அவற்றை உடைத்து  பார்த்தபோது 675 கிராம் தங்கப்பசை இருந்தது. இதன் மதிப்பு ரூ.32.44 லட்சம். இதையடுத்து பயணியை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

இன்று அதிகாலை சென்னையில் இருந்து அமெரிக்கா செல்லவிருந்த சரக்கு விமானத்தில் ஏற்ற வந்திருந்த 7 கொரியர் பார்சல்களை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது முக்கியமான டாக்குமெண்ட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பார்சல்களை டெல்லியை சேர்ந்த ஒருவர் அனுப்பியிருந்தார். சந்தேகம் அடைந்த சுங்கத்துறையினர் பார்சல்களை திறந்து பார்த்தபோது 10 ஆயிரத்து 100 போதை மாத்திரைகள் இருந்தது. போதை மாத்திரைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் என்று தெரிகிறது. போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.62.44 லட்சம் மதிப்புடைய 675 கிராம் தங்கம் மற்றும் 10,100  போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாலும் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாலும் பரபரப்பு நிலவியது.

Tags : Chennai ,Meenambakkam airport , Arrested
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...