×

சமூகத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை சாதி ரீதியாக அடையாளப் படுத்தக்கூடாது : ஐகோர்ட் கருத்து!!

சென்னை : தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளதால், சிலையை அகற்ற தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நெடுஞ்சாலைகளில் சிலைகள் வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சிலையை அகற்றியதில் எந்தத் தவறும் இல்லை எனத் தெரிவித்தார்.

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி , சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலங்கள், பொதுச் சாலைகள், மேய்க்கால் புறம்போக்கு ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.மேலும், பொதுமக்கள் உரிமைகளை பாதிக்காத வகையில், சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.

பின்னர், பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அவற்றை பூங்காவில் வைத்து பராமரிக்க வேண்டும். அதற்கான செலவுகளை சிலைக்கு அனுமதி பெற்றவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக ஆறு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் கருத்து தெரிவித்த நீதிபதி, அரசியல் கட்சிகள், சாதி, மதம் சார்ந்த அமைப்புகளுக்கு சிலைகளை வைக்க உரிமை உண்டு. ஆனால் பொது இடங்களில் வைக்கக்கூடாது. சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமூகத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை சாதி ரீதியாக அடையாளப் படுத்தக்கூடாது. பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகளை சேதப்படுத்துதல், அவமரியாதை செயல்களால் வன்முறை வெடிக்கிறது. இதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.மேலும், மக்களின் நலன் கருதி சாதி மோதல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் சிலைகள் வைக்கப்படுவதை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.


Tags : Caste ,Icourt , ஐகோர்ட் ,கருத்து
× RELATED புதுக்கோட்டை அருகே பட்டியலின மக்கள்...