×

வத்திராயிருப்பு- மகாராஜபுரம் சாலையில் சேதமடைந்த கல்லணை ஆற்று பாலம்: புதிய பாலம் கட்ட கோரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு-மகாராஜபுரம் சாலையில் கல்லணை ஆற்றுப்பாலம் சிதிலமடைந்து வருவதால், அதை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பிலிருந்து மகாராஜபுரம் செல்லும் சாலையில், கல்லணை ஆற்றுப்பாலம் உள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் பெய்யும் மழைநீர் கல்லணை ஆற்றுப்பாலம் வழியாக ஆலங்குளம் செல்லும். இந்த பாலம் கட்டி 40 வருடத்திற்கு மேலாகி விட்டது. இதனால், பாலத்தின் சுவர்கள் இடிந்து வருகிறது. அத்துடன் பாலத்தின் உயரம் குறைவாக உள்ளதால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரும்போது பாலத்தின் பல்வேறு செடி, கொடிகள் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வேறு வழியாக அந்த பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து உடைப்பு ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க பாலத்தை இடித்து விட்டு புதிதாக பாலத்தை உயர்த்தி கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பாலத்தை உயர்த்தி கட்ட கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே, பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தை உயர்த்தி கட்டினால், வெள்ளம் வந்தாலும் பாலத்தில் அடைப்பு ஏற்படாமல் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது’ என்றனர்.


Tags : Kallanai river ,Vathirairuppu ,Maharajpuram road , Damaged Kallanai river bridge on Vathirairuppu-Maharajpuram road: Request to build a new bridge
× RELATED மாசி மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்