×

தடுப்பூசி பற்றாக்குறையால் பரிதவிக்கும் இந்தியா!: சொந்த நாட்டு மக்களையே மோடி அரசு கைவிட்டதாக டைம்ஸ் நாளிதழ் கடும் விமர்சனம்..!!

வாஷிங்டன்: கொரோனா 2ம் அலையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, தடுப்பூசி பற்றாக்குறையால் பரிதவித்து வருகிறது. சொந்த நாட்டு மக்களையே மோடி அரசு கைவிட்டுவிட்டதாக சர்வதேச நாளிதழ்கள் கடுமையாக விமர்சித்திருக்கின்றன. அமெரிக்காவில் பிரபலமான டைம்ஸ் நாளிதழ் இந்தியாவின் தடுப்பூசி பற்றாக்குறைக்கு மோடி அரசின் தாமதமான செயல்பாடுகளே காரணம் என்று விமர்சித்திருக்கிறது. உலகிற்கே தடுப்பூசி உற்பத்தி கேந்திரமாக விளங்கிய இந்தியா, தற்போது அமெரிக்காவில் இருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்ய போராடி வருவதாகவும் அந்த நாளிதழ் சாடியிருக்கிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடந்த நவம்பர் மாதத்தில் அதிகளவிலான தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் நடவடிக்கையில் இறங்கின. 
மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தும், உற்பத்தியை அதிகரிப்பதற்கான முதலீட்டை மோடி அரசு வழங்கவில்லை என்று டைம்ஸ் நாளிதழ் விமர்சித்திருக்கிறது. மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த போவதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் தற்போது வரை இந்திய மக்கள் தொகையில் 3.1 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலை தாக்கத்தால் தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக பல ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதாக  டைம்ஸ் நாளிதழ்  விமர்சித்திருக்கிறது. 
தடுப்பூசி திட்டம் தொடங்கிய பின்னரும் கூட குறைந்த எண்ணிக்கையிலான மருந்துகளுக்கு மட்டும் ஆர்டர் கொடுத்த மத்திய அரசு, இக்கட்டான காலகட்டத்தில் மாநில அரசுகளே தடுப்பூசிகளை வாங்கி கொள்ளும்படி கடமையை உதறி தள்ளிவிட்டதாக டைம்ஸ் நாளிதழ் சாடியுள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை  தாண்டியுள்ளது. இதில் பெருமளவு எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகும் நிலையில் கொரோனா அதிகம் பாதித்த முதல் 10 நாடுகளில் தடுப்பூசி செலுத்துவதிலும் இந்தியா பின்தங்கி உள்ளது. இந்தியாவில் 89 சதவீதம் பேருக்கு இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி கூட கிடைக்கவில்லை என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  

The post தடுப்பூசி பற்றாக்குறையால் பரிதவிக்கும் இந்தியா!: சொந்த நாட்டு மக்களையே மோடி அரசு கைவிட்டதாக டைம்ஸ் நாளிதழ் கடும் விமர்சனம்..!! appeared first on Dinakaran.

Tags : India ,Modi government ,Washington ,2nd wave of Corona ,Times ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...