×

மகாளய அமாவாசை தர்ப்பணத்துக்கு தடை; நீர்நிலைகள் வெறிச்சோடியது: சமயபுரத்தில் அலைமோதிய கூட்டம்

திருச்சி: புரட்டாசி மகாளய அமாவாசையான இன்று கடற்கரை, நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் நீர்நிலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.  மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய அமாவாசையாகும். இதனால் புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தன்று ஏராளமானோர் நீர்நிலைகளில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவர். அதன்படி இன்று புரட்டாசி மகாளய அமாவாசையாகும்.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நீர்நிலைகளான கடற்கரை, ஆறு, குளங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும் நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டது. நீர்நிலைகளுக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் நேற்று முதலே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை, திருவாரூர் கமலாயல குளம், தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்பமண்டப படித்துறை, நாகை, வேதாரண்யம் கடற்கரைகள், மயிலாடுதுறை துலா கட்டம் ஆகிய இடங்களில் மகாளய அமாவாசையன்று கூட்டம் அதிகளவில் இருக்கும். தடை காரணமாக இன்று இந்த இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தடை உத்தரவு தெரியாமல் பலரும் நீர்நிலைகளுக்கு வந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இந்த தடை உத்தரவையும் மீறி திருவையாறு காவிரி தென்கரையோரத்தில் சிலர், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், திருவாரூர் தியாகராஜர் கோயில், நாகை சிக்கல் முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகிகள் அனுமதி வழங்கினர்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேற்று காலை முதலே கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்றிரவு 7.15 மணிக்கு கோலில் உள்ள வசந்த மண்டபத்தில் அம்மன், ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் கோயில் உள்பிரகாரத்தில் உள்ள கொடிமரம் வழியாக வலம் வந்து மூலஸ்தானத்துக்கு சென்றார். இதேபோல் இன்று அதிகாலை முதலே சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Tags : Mahalaya ,Samayapuram , Mahalaya New Moon
× RELATED அரசன் ஏரியில் பெண் சடலம் மீட்பு