வறண்ட, வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலத்தில் நன்கு வளரும் குமரியில் தொடங்கிய டிராகன் பழம் சாகுபடி

நாகர்கோவில் :  டிராகன் பழம் நாம் அதிகமாக அறியாத பழ வகைகளில் ஒன்று. இப்போது பரவலாக பழச்சந்தைகளில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும். இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும். இதன் தாயகம்  தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா ஆகும். தமிழகத்தில் தற்போது ஒரு சில பகுதிகளில் இந்த டிராகன் பழம் சாகுபடி தொடங்கியுள்ளது. குமரியிலும் மேற்கு மாவட்டங்களில் சிலர் பரிட்சார்த்த முறையில் சாகுபடியை தொடங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 4 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

  டிராகன் பழச்செடி அதிக கிளைகளையுடைய படரும் தன்மைக் கொண்ட கள்ளிச்செடி. இலைகள் முட்களாக மாறுபட்டிருப்பது, மூழ்கிய இலைத்துளைகள், தண்டுகள் தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டதாகவும், ஒளிச்சேர்க்கை செய்யக்கூடியதாகவும் இருப்பதால் இது வறண்ட, வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல தட்ப வெப்பநிலையில் நன்கு வளர ஏற்றது. வேர்கள் 30-40 செ.மீ வரை வளரக்கூடியது. மலர்கள் பெரியதாகவும் மனமுள்ளதாகவும் பச்சை கலந்த மஞ்சள் முதல் வெள்ளை நிற இதழ்களை கொண்டதாகவும் இருக்கும்.

 மலர்கள் இரவில் மலர்வதால் வௌவால் மற்றும் அந்துப்பூச்சிகள் மூலம் மகரந்த சேர்க்கை நடக்கிறது. காய்கள் பச்சையாகவும், பழுத்தவுடன் இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறும். பழங்கள் 5-12 செ.மீ நீளத்துடன் நீள் சதுரம் முதல் நீள் வட்டவடிவத்தை கொண்டு இருக்கும். ஒரு பழத்தின் எடை 150 முதல் 600 கிராம் வரை இருக்கும். பழத்தில் 70 முதல் 80 சதவீதம் சதை இருக்கும். சதையானது நல்ல வாசனையுடனும், சற்று புளிப்பு கலந்த இனிப்பு, முலாம்பழத்தின் சுவையுடனும் இருக்கும். பழத்தின் தோலில் ஆன்த்தோசையனின் என்ற நிறமியும் சதையில் பீட்டாலைன் என்ற நிறமியும் நிறைந்துள்ளது. வெண்ணிற சதைப்பற்றுள்ள பழங்களை விட சிவப்பு கலந்த நீலநிற சதைப்பற்றுள்ள பழங்களில் பீனால் அதிகமாக உள்ளது.

டிராகன் பழச்செடி நன்கு வடிகால் வசதியுள்ள, கரிம சத்து அதிகமுள்ள மண் வகைகளில் நன்கு வளரும். சற்று அமிலத்தன்மையுள்ள மண் வகைகள் சிறப்பானவை. வறண்ட, வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல தட்ப வெப்பநிலையில் நன்கு வளரக்கூடியது. நல்லசூரிய வெளிச்சம் மிகவும் அவசியம். கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் வரையுள்ள பகுதிகளில் வளரும். ஆண்டுக்கு 600 முதல் 1300 மி.மீ வரை மழை பெய்யும் இடம் சிறந்தது. வெப்பநிலை 30-40 சென்டி கிரேடு குளிர்கால வெப்பநிலை 10 சென்டி கிரேடுக்குக்கீழ் குறையாமல் இருக்கவேண்டும். வெப்பநிலை 40 சென்டி கிரேடுக்கு மேல அதிகரித்தால் தண்டுகள் மஞ்சள் நிறமாக மாறும். தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

  டிராகன் பழப்பயிரின் இனப்பெருக்கம் தண்டுகள் மூலம் செய்யப்படுகிறது. தண்டுகளை 10-40 செ.மீ அளவுள்ள துண்டுகளாக நறுக்கி, பாலை வடியவிட்டு, மணல், தொழு உரம் கலந்தமண் நிரப்பியுள்ள 12x30 செ.மீ பாலீத்தின் பைகளில் நடவேண்டும். 4-5 மாதங்களுக்கு பிறகு நன்கு வேர்விட்ட தண்டுகளை நடவுக்கு பயன்படுத்தலாம். நன்கு வேர் விட்ட தண்டுகள் 3-4x3-4 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யவேண்டும். ஒரு ஹெக்டேருக்கு ரூ.6.5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை ஆகும். ஒரு தூணுக்கு 4 செடிகள் என்ற வீதம் நடவு குழியில் மணல் கலந்து நடவு செய்யவேண்டும். ஹெக்டேருக்கு 1,780 செடிகள் நடலாம்.

செடிகள் நடுவதற்கு முன்பே 5-6 அடி உயரமுள்ள கல் அல்லது சிமெண்ட் தூண்களை நடவேண்டும். செடிகளை தாங்கி வளர்வதற்காக தூண்களின் நுனிப்பகுதியில் வட்டவடிவ உலோக அல்லது சிமெண்ட் அமைப்பு பொருத்தப்படவேண்டும். தண்டுகளை சிமெண்ட் அல்லது மர தூண்களோடு சேர்த்து கட்டி வளரவிடவேண்டும்.

 செடிகள் நட்ட பிறகு வளரும் முதன்மை கிளை தூண்களின் உயரம் வளரும் வரை பக்க கிளைகளை அவ்வப்போது வெட்டிவிடவேண்டும். முதன்மையான 2-3 கிளைகள் தூண்களில் உயரம் வரை வளர்ந்தவுடன் நிறைய பக்க கிளைகள் தோன்றி குடை போன்ற அமைப்பு உருவாக ஏதுவாக முதன்மை கிளையின் நுனியை கிள்ளிவிடவேண்டும். ஒரு வருடத்தில் 30-50 பக்க கிளைகள் தோன்றும். அளவான பக்க கிளைகளை மட்டுமே விட்டுவிட்டு பராமரித்தால் நல்ல காற்றோட்டம், பூச்சி மற்றும் நோய் தாக்காமல் செடிகளை காக்க முடியும். காய்ந்த, நோய் தாக்கிய, முதிர்ந்த தண்டுகளை அல்லது முதிர்ந்த கிளைகளை அவ்வப்போது வெட்டிவிட வேண்டும்.

செடியின் வேர்கள் மண்ணின் மேற்பரப்பிலேயே இருப்பதால் சரியான உரமேலாண்மை அவசியமாகும. செடிகள் நடுவதற்கு முன் குழிக்கு 10-15 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் நல்ல பலனைத்தரும். பிறகு ஒவ்வொரு வருடமும் இதனுடன் 2 கிலோ தொழு உரம் அதிகப்படுத்தி இடவேண்டும். ஆரம்ப தருணத்தில் அதிக தழைச்சத்து நல்ல வளர்ச்சியை தரும். அதன்பிறகு மணிச்சத்து மற்றும் சாம்பல் அதிகமாக இடலாம். கால்சியம் மற்றும் இதர நுண்ணூட்டச்சத்துகளை பயன்படுத்தும்போது பழங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் கோழி எருவு இடலாம்.

அதிகப்படியான நீர் மற்றும் முறையான நீர் நிர்வாகம் மிகவும் அவசியம். செடிகள் ஆழமற்ற வேர்களை மேற்பரப்பிலேயே கொண்டிருப்பதால் மண்ணில் ஈரப்பதம் காப்பது நல்ல பலனைத்தரும். ஆகஸ்ட்-ஜனவரி மாதம் வரை வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். அதிகமாக பழங்கள் உருவாக மலர்கள் தோன்றும் முன்னர் வறட்சியாக இருப்பது நல்லது. மலர்கள் உருவாவதற்காக நீர் பாய்ச்சுவதை நிறுத்தி வைக்க வேண்டும். மலர்கள் உருவான பிறகு முறையான நீர் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர் பாசனம் அதிக மகசூலைதரும். சொட்டு நீர் பாசனம் வழியாக செடிக்கு 2-4 லிட்டர் தண்ணீர் வாரம் இரு முறை தருவது சிறந்தது.

செடிகளுக்கு அதிகமாக நீர் பாய்ச்சும் போது பூஞ்சான நோய்கள் தாக்கும். மழைக்காலங்களில் வடிகால் அமைத்து தண்ணீரை தேங்க விடாமல் பார்த்துகொள்வது மிகவும் அவசியமாகும். வறட்சி நிலவும் சமயத்தில் முறையாக நீர் பாய்ச்சாமல் இருந்தால், பழங்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறையும்.

நடப்பு 2021-22ம் நிதியாண்டில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் டிராகன் பழப்பயிர் சாகுபடியை அறிமுகப்படுத்தும் நோக்கில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.96 ஆயிரம் வீதம் 4 ஹெக்டேர் ரூ.4.8 லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. இந்த இனத்தின் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து முன்னுரிமை பதிவேட்டில் தங்கள் பெயரை இணைத்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெற்றுக்கொள்ளலாம். என தோட்டக்கலைதுறை துணை இயக்குநர் ஷீலா ஜாண் தெரிவித்துள்ளார்.

ஹெக்டேருக்கு 22 டன் விளைச்சல்

டிராகன் பழப்பயிர் நட்டதிலிருந்து 15-18  மாதங்களில் பழங்கள் அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். 5 வருடங்களில் நிலையான  மகசூல் தொடங்கும். மே முதல் செப்டம்பர் வரை பூக்கும். பழங்களை ஜூலை முதல்  டிசம்பர் மாதம் வரை அறுவடை செய்யலாம். காய்கள் பச்சை நிறத்திலிருந்து  இளஞ்சிவப்பு நிறமாவதே அறுவடைக்கு ஏற்ற தருணம். பூக்கள் பூத்ததிலிருந்து  அறுவடை செய்ய 40-50 நாட்கள் ஆகும். ஒரு ஹெக்டேருக்கு 16-18 மாதத்தில் 4.5  டன் பழம் கிடைக்கும். 2ம் வருடத்தில் 7.5 டன் முதல் 10 டன் வரை பழங்கள்  கிடைக்கும். 3ம் ஆண்டு முதல் 16-22 டன் பழங்கள் கிடைக்கும். ஒரு முறை நடவு  செய்த செடிகளை 20 ஆண்டுகள் வரை பராமரிக்கலாம். பழங்களை 10 சென்டி கிரேடு  வெப்பநிலையில் 30-40 நாட்கள் வரை சேமிக்கலாம்.

மருத்துவ குணங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். புற்று நோய் குணப்படுத்த பயன்படுகிறது. தாகத்தை தணிக்கும் மற்றும் உடலை சுறுசுறுப்பாக்கும் பானம் ஆகும். ரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தமான நோய்களை எதிர்க்கும். ரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை நடுநிலைப்படுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது. நீரிழிவுள்ளவர்களின் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. உடலிலுள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவி செய்கிறது. உடல் பருமனை குறைக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

3 வகை பழங்கள்

டிராகன் பழத்தில் 3 வகைகள் உள்ளன. அவைசிவப்புத் தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம். சிவப்புத் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம். மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம். பொதுவாக இது இனிப்பு, புளிப்பு சுவையில் இருக்கும். சதையில் கருப்புப் புள்ளிகளாக விதைகள் இருக்கும். டிராகன் பழம் தமிழகத்திற்கு மிகவும் புதியதான சாகுபடி பழ வகைகளில் ஒன்று. நம் ஊரில் காணப்படும் கள்ளிச்செடி போன்று இதன் தோற்றம் காணப்படும்.

Related Stories:

More
>