×

மகாளய அமாவாசை!: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கடலூரில் தடையையும் மீறி நீர்நிலைகளில் குவியும் மக்கள்..!!


கடலூர்: மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடலூரில் தடையையும் மீறி நீர்நிலைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது. அமாவாசை முந்தைய 14 நாட்களும் மகாளய பட்சமாக கடைபிடிக்கப்பட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் நிகழ்வு நடைபெறும். அதன்படி, கடலூரில் வெள்ளி கடற்கரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

தற்போது மகாளய அமாவாசை தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் கூடுவார்கள் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று கோவில்களில் சாமி தரிசனம் செய்யவும், புண்ணிய தீர்த்தங்களில் தர்ப்பணம் செய்யவும் அரசு தடை விதித்தது. மேலும் மகாளய அமாவாசையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே தர்ப்பணம் கொடுக்குமாறு அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இருப்பினும் கடலூர் பெண்ணை ஆற்றின் கரைகளில் போலீசாரின் தடையை மீறி ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். காவல்துறையினர் பல்வேறு அறிவுரைகள் கூறியும், அதனை மீறி பெண்ணை ஆற்றங்கரையில் 500க்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். இதனால் கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.


Tags : Mahalaya Amavasaya, Darbhanam, Cuddalore, People
× RELATED திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்