குமரியில் கனமழை மலை கிராமங்கள் துண்டிப்பு நடுவழியில் சிக்கிய அரசு பஸ்கள்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிற்பகல் நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பிற்பகல் கனமழை கொட்டியது. இதன்காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு கோதையாறு, குற்றியாறு, கிழவியாறு, மயிலாறு பகுதிகளில் இருந்து வரும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மின்உற்பத்திக்கு பயன்படும் கீழ்கோதையாறு அணை நிரம்பி மறுகால் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மோதிரமலையில் இருந்து குற்றியாறு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. குற்றியாறு மலைக்கிராமத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை 5.30க்கு குலசேகரத்தில் இருந்து சென்ற இரண்டு அரசு பஸ்களும் தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பஸ்சில் இருந்த பள்ளி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். கனமழையால் நேற்று பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்து 10 ஆயிரம் கனஅடியை தாண்டியது. நீர்மட்டம் 44.56 அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று இரவு மறுகாலில் 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

Related Stories:

More
>