×

விராலிமலை சுற்று வட்டார பகுதியில் 2000 ஆண்டு பழமையான இரும்பு உருக்கு உலை, ஊது குழல் துருத்திகள் கண்டெடுப்பு-அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

விராலிமலை : விராலிமலை அருகே 2000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு உலைகள், ஊதுகுழல் துருத்திகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் விளாப்பட்டி மற்றும் பெரியமூளிப்பட்டி கிராமங்களுக்கு இடையே இரும்பு காலத்தை சேர்ந்த இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான இரும்பு உருக்கு உலைகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விளாப்பட்டியில் இருந்து வெம்மணி செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் பழமையான பானை ஓடுகள் குவியலாக காணப்படுகின்றன. அதனை ஒட்டி மண்ணில் புதைந்த வண்ணம் சுடுமண்ணால் செய்யப்பட்ட பழமையான இரும்பு உருக்கு உலைகள் இருப்பது தொல்லியல் ஆர்வலர்கள் செய்த கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

சேதமடைந்த நிலையில் மண்ணில் புதைந்த வண்ணம் ஐந்திற்கும் மேற்பட்ட உலை அமைப்புகள் இங்கு காணப்படுகின்றன. இந்த உலைகளை சுற்றிலும் பல்வேறு இரும்பு கழிவுகள் மற்றும் இரும்பு தாதுக்கள் நிறைந்த கற்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக உருக்கப்பட்ட இரும்பு கட்டிகளாக வார்க்கப்பட்டதற்கு அடையாளமாக உடைந்த இரும்பு கட்டிகள் இங்கு கிடைக்கின்றன.

மேலும் இங்கு இரும்பு உருக்கு தொழில் தொடர்ந்து நடைபெற்றதற்கு அடையாளமாக, பொற்பனைக்கோட்டையில் கிடைத்தது போல பத்திற்கும் மேற்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊதுகுழல் துருத்திகள் உலையினை சுற்றிலும் காணப்படுகின்றன. முக்கிய அம்சமாக அவை முதுமக்கள் தாழிகளை போல உட்புறமாக செம்மண் மற்றும் வெளிப்புறம் களிமண் என இரட்டை அடுக்குகளாக செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக இரும்பு உருக்குதல் என்பது அதிக வெப்பநிலையில், கிட்டத்தட்ட 2000 டிகிரி செல்சியஸில் நிகழ கூடிய செயல்முறையாகும். இந்த அதிகபட்ச வெப்பநிலையை நிலைநிறுத்த சுடுமண்ணால் செய்யப்பட்ட உலைகள் மற்றும் துருத்திகளை பயன்படுத்தி இங்கு இரும்பு தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் இப்பகுதியில் சுண்ணாம்பு தாது படிவுகள் அதிக அளவில் கிடைக்கிறது. இரும்பு உருக்கு முறைகளில் கழிவுகளை நீக்க சுண்ணாம்பு முக்கிய பொருளாக பயன்படுவது குறிப்பிடத்தக்கது.

உலைகளினை சுற்றிலும் பலவகை பானை ஓடுகள் குவியல்களாக காணப்படுகின்றன. குறிப்பாக பழமையான கருப்பு சிவப்பு பானை ஓடுகள், மெல்லிய கருப்பு நிற பானை ஓடுகள் இங்கு கிடக்கின்றன. அவற்றில் முக்கிய அம்சமாக வெளிப்புறம் வழவழப்பான மேற்பூச்சு கொண்ட பானை ஓடுகளும் உள்ளன.இந்த பானை ஓடுகள் பல்வேறு அளவுகளில் பயன்பாட்டிலிருந்த பலவகை மண்பாண்டங்களின் எச்சங்களாக அமைந்துள்ளன. மேலும் பண்டைய காலங்களில் திண்ணை விளையாட்டுகளில் பயன்படுத்தும் சுடுமண் சில்லுகளும் இங்கு காணப்படுகிறது.

விளாப்பட்டிக்கு அருகில் ஆதனப்பட்டி கிராமத்தில் தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான குத்துக்கற்களுடன் கூடிய முதுமக்கள் நினைவு சின்னங்கள் அமைந்துள்ளன. அங்கு காணப்படும் பானை ஓடுகளை போன்றே இந்த இரும்பு உருக்கு உலைகளை சுற்றி கிடக்கும் பானை ஓடுகளும் அமைந்துள்ளன. ஆகவே இந்த இரும்பு உருக்கு உலைகளும் அதே காலகட்டத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

மண்ணரிப்பு மற்றும் மனித செயல்பாடுகள் காரணமாக பழமையான இந்த உலை அமைப்புகள் தொடர்ந்து சிதைந்து வருகின்றன. எனவே இங்கு கிடைக்கும் உலை மிச்சங்கள், சுடுமண் ஊதுகுழல் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சேகரித்து அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Viralimai , Viralimalai: 2000 year old iron and steel furnaces and flute accordions have been found near Viralimalai. Pudukottai
× RELATED விராலிமலை அருகே பேராம்பூர்...